விக்டோரியா மாநில முன்னாள் பிரீமியரான ஜசிந்தா ஆலன் (Jacinta Allan), தொழிலாளர் கட்சியின் (Labor) தலைமையிலிருந்து விலகிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அரசியலை விட்டே முற்றிலும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
பெண்டிகோ ஈஸ்ட் (Bendigo East) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜசிந்தா ஆலன், வெள்ளிக்கிழமை காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
1999-ஆம் ஆண்டு தனது 26-வது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தனது வாழ்நாளின் பாதியை விக்டோரியன் நாடாளுமன்றத்தில் கழித்துள்ளார்.
விக்டோரியாவின் மிக இளைய பெண் எம்பி மற்றும் 29 வயதில் மிக இளைய அமைச்சராகப் பொறுப்பேற்ற பெருமைக்குரியவர்.
சப்டம்பர் 2023-ல் டேனியல் ஆண்ட்ரூஸ் விலகியதைத் தொடர்ந்து விக்டோரியாவின் பிரீமியராகப் பொறுப்பேற்றார். ஜூலை 27 அன்று கட்சியின் பெரும்பான்மை ஆதரவை இழந்ததையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது உள்ளூர் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் திரட்டிய $200,000 நிதியைத் தொழிலாளர் கட்சிக்கு (ALP) நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தனது உரையில் ஜனநாயகத்தின் தற்போதைய நிலை, பரவி வரும் வெறுப்பு உணர்வுகள், போலி AI புகைப்படங்கள் (fake AI imagery) மற்றும் சமூகத்தில் பிரிவினையைத் தூண்டும் செயல்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
தனது 27 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், இனிவரும் காலத்தை குடும்பத்தினருடன் செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.