ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், தனது இளைய மகனின் கண் முன்னே 30 வயது நிரம்பிய தாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Ferntree Gully பகுதியில் உள்ள இல்லத்தில் ஆன்மேரி ஓ'ரைலி (Annmarie O’Reilly) தீவிரக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
வெள்ளிக்கிழமை காலை, தம்பதியரின் மூத்த மகன்கள் இருவரும் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறிது நேரத்தில், காலை 10 மணிக்கு முன்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலேயே ஓ'ரைலியின் 45 வயதுக் கணவரைக் கைது செய்த காவல்துறையினர், சனிக்கிழமை இரவு அவர் மீது முறைப்படி கொலைக் குற்றம் சாட்டினர்.
சம்பவத்தன்று வீட்டின் வெளியே நபர் ஒருவர் அசாதாரணமாக நடந்து கொண்டதைக் கண்ட அப்பகுதிவாசி ஒருவர், சந்தேகமடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோதே இந்த கொடூரக் காட்சியைக் கண்டு அவசரப் பிரிவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். 30 மணி நேரத்திற்கும் மேலாக அந்த வீடு குற்றவியல் கட்டுப்பாட்டுப் பகுதியாகவே வைக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்திலிருந்து மெல்போர்னிற்கு இடம்பெயர்ந்த இந்த தம்பதியரிடையே, இதுவரை குடும்ப வன்முறை தொடர்பான எந்தவொரு முறைப்பாடும் பதிவாகியிருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஓ'ரைலியின் மறைவையடுத்து அவரது சகோதரர் சமூக வலைதளத்தில், "என்னால் இதை நம்பவே முடியவில்லை... நீங்கள் சந்திக்கும் மிகச் சிறந்த பெண், தனது குழந்தைகளுக்குச் சிறந்த தாய்... இறைவனின் திருவடிகளை அடைவாயாக" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் மூலம், இந்த ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையால் கொல்லப்பட்ட 46வது பெண்மணி ஆன்மேரி ஓ'ரைலி என்பது குறிப்பிடத்தக்கது.