தெற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட 'நீண்ட மூக்கு' கொண்ட ரோமக் கடல் நாய் (long-nosed fur seal) ஒன்றுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கு ஒன்றுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடிலெய்டில் இருந்து தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீச் போர்ட் (Beachport) என்ற இடத்தில் இந்தச் கடல் நாய் கண்டெடுக்கப்பட்டதாக கூட்டாட்சி விவசாய அமைச்சர் ஜூலி காலின்ஸ் ஹோபார்ட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ஆஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கு ஒன்றிற்கு எச்5 (H5) பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பது விசனத்திற்குரிய ஒன்றாகும்" என்று திருமதி காலின்ஸ் கூறினார்.
"இது கவலையளிக்கும் ஒரு (வளர்ச்சியாக) இருந்தாலும், பிற வனவிலங்குகளுக்கு - குறிப்பாகக் கடல் பாலூட்டிகளுக்கு, அதிலும் வனப் பறவைகளிடையே தொற்று விகிதம் அதிகமாக உள்ள பகுதிகளில் - தொற்று பரவத் தொடங்குவது எதிர்பாராத ஒன்று அல்ல.
இந்தச் குறிப்பிட்ட விலங்குக்குக் கண்டறியப்பட்ட தொற்றானது, நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பிற கடல் பாலூட்டிகளுடன் தொடர்புடையதாகத் தற்போது வரை தெரியவில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட காட்டுப் பறவைகளின் தொடர்பினாலோ அல்லது அவை பகிர்ந்து கொள்ளும் சுற்றுச்சூழல் வழியிலோ இந்த விலங்கிற்குத் தொற்று ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இந்த நோய் பரவத் தொடங்கியது முதல் இதுவரை 298 எச்5 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 183 பாதிப்புகள் தெற்கு ஆஸ்திரேலியாவிலேயே பதிவாகியுள்ளன.
"தற்போதைய நிலவரப்படி, நமது கோழிப் பண்ணைகள் அல்லது விவசாய அமைப்புகளில் நோய் தொற்று ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்று அமைச்சர் காலின்ஸ் கூறினார்.
எச்5 பறவைக் காய்ச்சலுக்கு எதிரான மாநிலத்தின் நடவடிக்கை குறித்து விவாதிக்க "வரவிருக்கும் நாட்களில்" தெற்கு ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளைக் காணும் எவரும் அவற்றைத் தொடவோ அல்லது அருகில் செல்லவோ வேண்டாம் என்றும், மாறாக அவை இருக்கும் இடத்தைப் பதிவு செய்து அறிக்கை அளிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.