மெல்போர்ன் கட்டடத் துறை ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார் , இன்று காலை மெல்போர்னில் உள்ள CFMEU தொழிற்சங்கத்தின் தலைமையகத்தில் அதிரடி சோதனை நடத்தி 5 பேரைக் கைது செய்துள்ளனர்.
ரகசிய கமிஷன்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, 'டாஸ்க்போர்ஸ் ஹாக்' (Taskforce Hawk) துப்பறிவாளர்கள் ஆறு இடங்களில் சோதனை நடத்தத் தேவையான பிடியாணைகளை நிறைவேற்றியதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சோதனையிடப்பட்ட இடங்களில் எலிசபெத் வீதியில் அமைந்துள்ள கட்டடத் தொழிலாளர் சங்க அலுவலகமும் ஒன்றாகும்.
"ஐந்து பேர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்" என பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலதிக விபரங்கள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், இந்தத் திடீர் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என CFMEU (Assistant Administrator) மேட் மெக்கவன் தெரிவித்துள்ளார்.
"டாஸ்க்போர்ஸ் ஹாக் அமைப்பின் ஒரு பகுதியாக இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கை குறித்து CFMEU தொழிற்சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது நேரடி பொலிஸ் விசாரணை என்பதால், இப்போதைக்கு மேலதிக கருத்து எதையும் தெரிவிக்க முடியாது" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.