நியூ சவுத் வேல்ஸ் , மத்திய வடக்குக் கடற்கரைப் பகுதியில் முன்னாள் பெண் துணையைப் படுகொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 8 மாதங்களுக்குப் பிறகு 47 வயது நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து கொலைக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி, போர்ட் மெக்குவாரியில் உள்ள கோர் வீதியில் அமைந்திருந்த வீடொன்றிலிருந்து 31 வயதான மேகன் டாங்க் (Megan Tangye) பலத்த காயங்களுடன் காலை 11:40 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், கடுமையான காயங்கள் காரணமாகச் சில மணிநேரங்களிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை போர்ட் மெக்குவாரியில் உள்ள ஹேஸ்டிங்ஸ் ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த படகு இல்லத்தில் (houseboat) வைத்து 47 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அப்ப படகில் இருந்த நாய் ஒன்றையும் உள்ளூர் நகர சபை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட நபர் மீது குடும்ப வன்முறை சார்ந்த கொலைக் குற்றம் (DV Murder) மற்றும் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேகன் டாங்க் பலமான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் (Blunt-force trauma) ஏற்பட்ட காயங்களே அவரது மரணத்திற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொடூரச் சம்பவம் குறித்துப் பொலிஸ் ஆய்வாளர் மார்க் ரோஜர்ஸ் கூறுகையில், "மருத்துவப் பரிசோதகரின் இறுதி அறிக்கைகளுக்காக அதிகாரிகள் காத்திருந்தனர். சாட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்த விசாரணைகள் மிகவும் சிக்கலானவை" எனக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தச் சம்பவம் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்குப் பேரிழப்பையும் பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட 47 வயது நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகக் கூறியுள்ளனர்.