கொலம்பியாவில் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP) அமைத்துள்ள புதிய போதைப்பொருள் எதிர்ப்பு சிறப்புப் படை (IJIT) தொடர்பில் தெளிவற்ற கேள்விகள் எழுந்துள்ள நிலை, இந்த நடவடிக்கை லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது டிரம்ப் நிர்வாகம் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ் ஆணையர் கிரிஸ் பாரெட் (Krissy Barrett), ஆஸ்ஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பொலிஸார் இணைந்து சர்வதேச கூட்டு புலனாய்வுக் குழு (IJIT) ஒன்றை உருவாக்க நிதியளிப்பதாக அறிவித்தார்.
நமது பிராந்தியத்திற்குள் சட்டவிரோத போதைப்பொருட்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான ஆதாரங்களைச் சேகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
"பசிபிக் பிராந்தியம் வழியாகவும் ஆஸ்திரேலியாவை நோக்கியும் நிகழும் முடிவில்லாத போதைப்பொருள் கடத்தல், தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது" என்று ஆணையர் பாரெட் தெரிவித்தார்.
பொகோட்டாவில் உள்ள அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரிகள், கொலம்பிய பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குச் சென்று கொக்கைன் தயாரிப்பு ஆய்வகங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் கொலம்பியாவில் 20 டன்னுக்கும் அதிகமான கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளபோதிலும், "நாம் மேலும் துணிச்சலாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்பதால் இந்தச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த IJIT குழு, கொலம்பியாவின் சட்டத்துறை, தேசிய பொலிஸ், கடற்படை, அமெரிக்க சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்கள், இன்டர்போல் (INTERPOL) மற்றும் மெக்சிகோ, நியூசிலாந்து, பசிபிக் நாடுகளின் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும்.
அமெரிக்காவின் தாக்குதல்களும் எழும் சந்தேகங்களும்
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் அமெரிக்கா ஆயுதமேந்திய மோதலில் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்ததுடன், பசிபிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் உள்ள கடத்தல் படகுகள் மீது தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 221 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சட்ட வல்லுநர்களும் கல்வியாளர்களும் இந்தத் தாக்குதல்களை சர்வதேச சட்டத்திற்கு எதிரான "நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட படுகொலைகள்" என்று விமர்சித்து வருகின்றனர்.
கிரீன்ஸ் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge), இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை என்றும், அமெரிக்காவின் உயிர்க்கொல்லித் தாக்குதல்களுக்கு அவுஸ்திரேலியாவின் உளவுத் தகவல்கள் உதவுமானால் அது கடுமையான எச்சரிக்கை மணி என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்ஸ்திரேலிய தொழில்முறை புலனாய்வு அதிகாரிகளின் சங்கத் தலைவர் பில் கொவாலிக் (Phil Kowalick) கூறுகையில், கூட்டு நடவடிக்கைகளில் தகவல்களைப் பகிர்வது இயல்பானதுதான் என்றாலும், அவுஸ்திரேலியாவின் உளவுத் தகவல் அமெரிக்காவின் உயிர்க்கொல்லித் தாக்குதலுக்குப் பயன்படுமானால் அது கவலைக்குரியது என்றார்.
பஜெட் மற்றும் தகவல்களை வெளியிட மறுப்பு
இந்த IJIT குழுவின் வரவு செலவுத் திட்டம், செயல்பாட்டு இலக்குகள் மற்றும் வெற்றி அளவீடுகள் தொடர்பான ஆவணங்களைக் கேட்கும் சுதந்திரமான தகவல் அறியும் உரிமை (FOI) கோரிக்கையை அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸ் (AFP) நிராகரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் பாதிக்கப்படும் எனக் கூறி, இது தொடர்பான 60 ஆவணங்களை வெளியிட AFP மறுத்துவிட்டது. இந்தத் தகவல்களை வெளியிட்டால் அவுஸ்திரேலியா - கொலம்பியா உறவுகள் பாதிக்கப்படும் என்றும், சர்வதேச பங்காளிகளுடனான நம்பிக்கை சீர்குலையும் என்றும் AFP வாதாடியுள்ளது.
அதேவேளை, பொதுமக்களின் வரிப்பணத்தில் வெளிநாட்டில் நடத்தப்படும் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு தெளிவான இலக்குகளும் வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நடப்பு கூட்டாட்சி வரவு செலவுத் திட்டத்தில், 2026-27 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு பொலிஸ் உதவி நடவடிக்கைகளுக்காக ஆஸ்ஸ்திரேலிய பெடரல் பொலிஸுக்கு $1.16 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.