சமூக ஊடகங்களால் இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டமூலத்தை நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அறிவித்துள்ளார்.
கடந்த 2025 டிசம்பரில் ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடையை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றால் இத்தகைய கட்டுப்பாட்டைக் கொண்டுவரப் பிரதமர் லக்ஸன் தலைமையிலான பழமைவாத அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் லக்ஸன் வெளியிட்ட அறிக்கையில், "நியூஸிலாந்து குழந்தைகளுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்புகளை எங்களால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2025-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, நியூஸிலாந்து பதின்ம வயதினரில் மூன்றில் ஒரு பங்கினர் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 5 மணிநேரத்தைச் சமூக ஊடகங்களில் செலவிடுவது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இப்புதிய சட்டத்தின்படி, இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னாப்சாட் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட தளங்கள், தங்களது பயனாளர்கள் 16 வயதைக் கடந்தவர்களா என்பதைச் சரிபார்க்க "நியாயமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படலாம்.
பயனாளர்களின் வயதை உறுதி செய்ய "தற்போதுள்ள கணக்கு விவரங்கள், முக அமைப்பைக் கொண்டு வயதைக் கணிக்கும் தொழில்நுட்பம் (facial age estimation), டிஜிட்டல் அடையாள சேவைகள் மற்றும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்" பயன்படுத்தப்படலாம் என லக்ஸனின் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைப் போலவே, நியூஸிலாந்தும் இச்சட்டத்தின் கீழ் பெற்றோர்களுக்கோ அல்லது சிறுவர்களுக்கோ அபராதம் விதிக்காது.
இருப்பினும், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 99 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கும் முறையைக் கொண்டுள்ள நிலையில், நியூஸிலாந்து நிறுவனங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட வேறுபட்ட அபராத முறையைப் பரிந்துரைத்துள்ளது.
அதேவேளையில், ஆஸ்திரேலியாவின் தடை மற்றும் நியூஸிலாந்தின் பரிந்துரைக்கப்பட்ட சட்டம் ஆகிய இரண்டிலிருந்தும் வாட்ஸ்அப் போன்ற குறுஞ்செய்தி செயலிகள், 'ரோப்லாக்ஸ்' (Roblox) போன்ற ஆன்லைன் விளையாட்டுத் தளங்கள் மற்றும் சாட்பாட்களான ChatGPT, Gemini, Copilot போன்ற உற்பத்தித்திறன் சார்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பரில் ஆஸ்திரேலியா இந்தத் தடையை அமல்படுத்தியது முதல் நியூஸிலாந்து அரசு இது குறித்து பரிசீலித்து வருகிறது. ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளும் இத்தகைய தடைகளை அமல்படுத்தியுள்ளன, மேலும் பல நாடுகள் இதுகுறித்த சட்டங்களை ஆய்வு செய்து வருகின்றன.
சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளும் சில பெற்றோர்களும் இக்கட்டுப்பாடுகளை வரவேற்றுள்ள நிலையில், இத்தகைய விதிகளை எளிதாக ஏமாற்றிவிட முடியும் என்றும், பயனாளர்களின் அடையாளச் சான்றுகளைக் கேட்பது தனிநபர் தரவுப் பாதுகாப்பிற்கு (Privacy) அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் தரவு பாதுகாப்பு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இது குறித்துக் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்கள் மையத்தின் இயக்குநர் பேராசிரியர் நிக்கோலஸ் காரா பேசுகையில், "ஆஸ்திரேலிய அனுபவத்திலிருந்து பிற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு முக்கியப் பிரச்சினைகள் உள்ளன.
முதலாவது, நடைமுறையில் இந்தத் தடை பலனளிக்கவில்லை. இளைஞர்கள் இன்னமும் சமூக ஊடகங்களை எளிதாகப் பயன்படுத்தி வருகிறார்கள்" என்றார். தடை அமலுக்கு வந்த மூன்று மாதங்களுக்குப் பிறகும் 80%க்கும் அதிகமான ஆஸ்திரேலியப் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதாக வரும் செய்திகளை அவர் சுட்டிக்காட்டினார்.
"இரண்டாவது பிரச்சினை, இந்தத் தடை பிற்போக்கானது. சமூக ஊடகங்கள் என்பது இளைஞர்கள் கற்றுக் கொள்வதற்கும், பழகவதற்கும், தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் முக்கியமான தளங்கள் என்பதை இது அங்கீகரிக்கத் தவறுகிறது" என்றும் அவர் கூறினார்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான டிஜிட்டல் உரிமைகள் பிரிவின் தலைவர் ஹன்னா ஸ்டோரியும் இதே கருத்தைப் பிரதிபலித்துள்ளார்.
"வயதைச் சரிபார்க்கும் முறைகள் தனிநபர் தரவுப் பாதுகாப்பில் பெரும் கவலைகளை எழுப்புகின்றன. ஆனால், பல தளங்களை அடிமையாக்கும் வகையிலும், கேடு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பெருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள அவற்றின் அடிப்படை அமைப்பை மாற்ற இவை எதுவுமே செய்யவில்லை.
தடையை மீறும் குழந்தைகளும், இத்தளங்களில் தொடரும் பெரியவர்களும் அதே அபாயங்களைத்தான் தொடர்ந்து எதிர்கொள்வார்கள். பயனாளர்களைத் தடுப்பதை விட, தளங்கள் அனைவருக்குமே பாதுகாப்பானதாக வடிவமைக்கப்படுவதை உறுதி செய்வதிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் லக்ஸனின் மத்திய-வலதுசாரிக் கட்சியான 'நேஷனல்' கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியில் உள்ள லிபர்ட்டேரியன் 'ACT' மற்றும் பாப்புலிஸ்ட் 'NZ First' ஆகிய இரு கட்சிகளும் இந்தச் சட்ட முன்வரைவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இச்சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக இவ்விரு சிறிய கட்சிகளும் திங்கள்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
அதேபோல, மிகப்பெரிய எதிர்க்கட்சியான மத்திய-இடதுசாரி தொழிலாளர் கட்சியின் (Labour) எம்பிக்கள் இதற்கு ஆதரவாக வாக்களிப்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கிரிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, அக்டோபர் 1-ஆம் தேதி நியூஸிலாந்து நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதால், அதற்குள் இச்சட்ட முன்வரைவு மீது வாக்கெடுப்பு நடத்தப் போதுமான அவகாசம் இருக்காது என்று பிரதமர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்தில் ஒரு சட்ட முன்வரைவு சட்டமாக மாறுவதற்கு வழக்கமாகப் பல மாதங்கள் வரை மூன்று சுற்றுகள் வாக்கெடுப்பைக் கடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.