சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மம்டூ நௌபிள் (Mamdouh Noufl - 62) என்பவர் கடந்த 2023 மே மாதம் முதல் காணாமல்போயிருந்த நிலையில், அதே ஆண்டு ஜூலை மாதம் அவர் காணாமல்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2024 அக்டோபர் மாதம் கிரீன்ஏக்கரில் (Greenacre) உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, அவரது மனைவியான நிர்மீன் நௌபிள் (Nirmeen Noufl - 55) கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அவர் மீதான கொலை வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், இரு தரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாக நீதிபதியிடம் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து புதன்கிழமை காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மீன், 2023 மே 3 அல்லது அதை ஒட்டிய நாட்களில் தனது கணவரைக் கொலை செய்ததாகச் சுமத்தப்பட்ட முதன்மைக் குற்றச்சாட்டை (murder) மறுத்தபோதிலும், குற்றவியல் கொலைக்கான (manslaughter) மாற்றுப் பிரிவின் கீழ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த ஒப்புதலை ஏற்றுக்கொண்டதாக நீதிபதி பீட்டர் ஹேமில் (Justice Peter Hamill) முன்னிலையில் தெரிவித்தார்.
குற்றத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நிர்மீன் நௌபிளைக் குற்றவாளியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்த நீதிபதி, அரசுத் தரப்பு இந்த ஒப்புதலை ஏற்றுக்கொண்டதால் கொலைக் குற்றச்சாட்டு ரத்தாகிறது என்றும் அறிவித்தார். இவருக்கான தண்டனை விபரங்கள் அடங்கிய விசாரணை செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளது.
நிர்மீன் கைது செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் டேனியல் டோஹெர்டி (Daniel Doherty), நிர்மீன் தனது கணவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, தென்மேற்கு சிட்னியில் உள்ள குப்பைத் தொட்டிகளில் வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், கிரீன்ஏக்கர் வீட்டில் தரையை மாற்றி அமைத்ததுடன், குற்ற ஆதாரங்களை மறைக்கப் பெருமளவில் சுத்தம் செய்யும் பணிகளையும் அவர் மேற்கொண்டதாகக் கூறிய அதிகாரி, இந்தச் சம்பவத்தைக் "கொடூரமானது" என்றும் வர்ணித்திருந்தார்.
இப்பகுதியில் இதுவரை மம்டூ நௌபிளின் உடல் எச்சங்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.