மீண்டும் வெள்ள அபாயம்: நேபாளத்துக்கு எச்சரிக்கை
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள ஏரிகள் உடையும் அபாயம் நிலவுவதால், பேரழிவுப் பகுதியில் புதிய வெள்ளப்பெருக்கு உடனடியாக ஏற்படக்கூடும் என நேபாள மற்றும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நேபாளத்தில் குறைந்தது 469 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 39 ஆஸ்திரேலியர்கள் உட்பட சுமார் 1,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
திபெத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னமும் மூன்றாகவே உள்ள நிலையில், 550க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முழு கிராமங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், ஆழமான சேற்றிலிருந்து தப்பியவர்களையும் சடலங்களையும் மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல்போன 39 ஆஸ்திரேலியர்களில், அமெரிக்காவைச் தளமாகக் கொண்ட 'இமாலயன் கிளேசியர்' (Himalayan Glacier) என்ற மலையேற்ற நிறுவனத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு சிட்னியைச் சேர்ந்த வெங்கடராமன் பாலகிருஷ்ணன் (52) மற்றும் அவரது மனைவி சித்ரா வெங்கடராமன் (46) ஆகியோரும் அடங்குவர்.
லங்டாங் பள்ளத்தாக்கில் நடைபெற்ற அந்த சுற்றுப்பயணத்தில் 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 13 ஆஸ்திரேலியர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்திய ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவின் 'ஈஷா அறக்கட்டளை' மூலம் 11 ஆஸ்திரேலியர்கள் ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்து, சீனப் பகுதியில் உள்ள குடிவரவு அலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டிருந்தபோது தொடர்பை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆறு ஆஸ்திரேலியர்கள் காட்மண்டூவை தளமாகக் கொண்ட 'கைலாஷ் ஜர்னீஸ்' (Kailash Journeys) நிறுவனத்துடனும், ஒருவர் 'காட்மண்டூ ஹோலிடே டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' நிறுவனத்துடனும் பயணம் செய்துள்ளனர்.
ஆன்மீகப் பயணத்திற்காக கைலாச மலைக்குச் சென்ற குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த கனகாம்பிகை சுந்தரசன் என்ற பெண்ணும் காணாமல் போயுள்ளார்.
காணாமல்போன ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை உயரக்கூடிய "துரதிர்ஷ்டவசமான வாய்ப்பு" உள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
"பாதிக்கப்பட்ட பகுதியில் எத்தனை ஆஸ்திரேலியர்கள் இருந்தனர் என்பதை அடையாளம் காணவும், தொடர்பில் இல்லாத ஆஸ்திரேலியர்களின் நலனை உறுதிப்படுத்தவும் நாங்கள் அவசரமாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று செனட்டர் வோங் ஏபிசியின் 'ஆர்என் பிரேக்பாஸ்ட்' நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா 5 மில்லியன் டாலர் உதவித் திட்டத்தை வழங்கும் என்றும், மனிதநேய உதவிப் பணிகளுக்குத் துணைபுரிய நேபாளத்திற்கு கூடுதல் அதிகாரிகளை அரசாங்கம் அனுப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
நேபாளத்தில் ஆஸ்திரேலியாவின் 20 பணியாளர்கள் உள்ளதாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் நான்கு அதிகாரிகளையும், அடுத்த சில நாட்களில் இரண்டாவது குழுவையும் அப்பகுதிக்கு அரசு அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.