விக்டோரியா மாநிலத்தில் உள்ள இரு வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் செய்யும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முன்னாள் மசாஜ் சிகிச்சையாளருக்கு நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
Mildura பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் 2025 ஆம் ஆண்டு மசாஜ் சிகிச்சையாளராகப் பணியாற்றி வந்த 33 வயதான டோமி மேத்யூ (Tomey Mathew) என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலுக்குரிய முறையான தகுதிகள் இல்லாத இவர், பயிற்சியின் போதே பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பெண்களின் அந்தரங்கப் பகுதிகளில் தொடுவதற்கு அனுமதி இல்லை என்பது பயிற்சி காலத்தின் போதே மேத்யூவிற்குத் தெளிவுபடுத்தப்பட்டதாக அவரது முன்னாள் முதலாளி மைல்டுரா நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இத்துறையில் பணியாற்றிய காலத்தில் மேத்யூ சுமார் ஐந்து பெண்களுக்கு மசாஜ் செய்துள்ளதாகவும், அவர்களில் மூவர் சக பெண் ஊழியர்களாக இருக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர்கள் அல்லாத எஞ்சிய இரு வாடிக்கையாளர்களே, மசாஜ் சிகிச்சையின் போது தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தற்செயலாக நடந்த தொடுதல் அல்ல
முதல் பாதிக்கப்பட்ட பெண், 2025 மார்ச் 13 அன்று லாங்ட்ரீ மாலில் (Langtree Mall) உள்ள 'மசாஜ் போர்னியோ 1' (Massage Borneo 1) மையத்திற்கு 45 நிமிட எண்ணெய் மசாஜிற்காகச் சென்றுள்ளார். மேத்யூ அவருக்கு மசாஜ் செய்யத் தொடங்கியுள்ளார்.
கால்கள், கைகள், தோள்கள் மற்றும் தலைப்பகுதியில் மசாஜ் செய்த வரை அனைத்தும் இயல்பாகவே இருந்துள்ளது. இருப்பினும், மேத்யூ தனது மார்பகங்களைப் போர்த்தியிருந்த துண்டின் அடியில் கையை விட்டுத் தவறாகத் தொட்டபோது, பயத்தில் உறைந்துபோய் தன்னால் பேச முடியாமல் போனதாகப் பாதிக்கப்பட்ட பெண் நினைவு கூர்ந்தார்.
அவரை நிறுத்துமாறு கூறியபோதிலும், தலைப்பகுதிக்கு பின்புறமிருந்து மீண்டும் அதே செயலை மேத்யூ தொடர்ந்துள்ளார்.
இரண்டாவது பாதிக்கப்பட்ட பெண், 2025 ஏப்ரல் 5 அன்று 30 நிமிட கழுத்து மசாஜிற்காக முன்பதிவு செய்திருந்தார். அந்த மசாஜ் சுமார் ஒரு மணி நேரம் நீடித்துள்ளது. அவரிடமும் துண்டின் அடியில் கையை விட்டு இருமுறை மார்பகப் பகுதியை மேத்யூ தவறாகத் தொட்டுள்ளார். அவர் எச்சரித்து நிறுத்துமாறு கூறிய பிறகே மேத்யூ அறையை விட்டு வெளியேறியுள்ளார்.
இருப்பினும், தான் இரு பெண்களின் மார்பகங்களையும் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ தொடவில்லை என மேத்யூ மறுத்துள்ளார்.
ஆனால், தொட்ட விதம் மற்றும் தொட்ட நேர அளவைக் கருத்தில் கொள்ளும்போது, இச்சம்பவத்தை தற்செயலானது என்று கூறி கடந்துவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட இரு பெண்களின் வாக்குமூலங்களும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன. இச்சம்பவத்திற்குப் பிறகு மன உளைச்சல், பதற்றம் மற்றும் தேவையற்ற பயம் ஏற்படுவதாக முதலாம் பெண் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது பெண், இச்சம்பவம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேத்யூவின் சட்டத்தரணி ராபர்ட் தைசன் (Robert Thyssen) வாதிடுகையில், மேத்யூவிற்குப் போதிய அனுபவமும் பயிற்சியும் இல்லாததால் இத்தவறு நடந்துவிட்டதாகவும், அவர் தற்போது குவீன்ஸ்லாந்து பகுதிக்குச் சென்று முதியோர் பராமரிப்பு மையத்தில் பணிபுரிந்து வருவதால் மீண்டும் தவறு செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறி சிறைத்தண்டனையைத் தவிர்க்குமாறு கோரினார்.
எனினும், பொலிஸ் தரப்பு வழக்குரைஞர் ஜாக்கி லோ (Jackie Lowe), குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு சிறைத்தண்டனை மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என வாதிட்டார். மேத்யூ தனது தவற்றை ஒப்புக்கொள்ளவோ அல்லது மனந்தந்தவோ இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிவான் கிரெக் தாமஸ் (Greg Thomas), "குற்றத்தின் தீவிரத்தன்மை, நம்பிக்கைத் துரோகம் மற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிறைத்தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் பொருத்தமாக இருக்காது" எனக் கூறி, டோமி மேத்யூவிற்கு 5 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.