தெற்கு குயின்ஸ்லாந்தில் இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, 18 மாத தீவிர விசாரணைக்குப் பிறகு 33 வயது நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து டூவூம்பா குழந்தை பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு (Toowoomba Child Protection Investigation Unit) விசாரணை நடத்தி வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு, உயிராபத்தான பலத்த காயங்களுடன் அந்த ஆண் குழந்தை வார்விக் வைத்தியசாலையில் (Warwick Hospital) அனுமதிக்கப்பட்டது.
18 மாதங்கள் நீடித்த நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஹாரிஸ்டவுன் (Harristown) பகுதியில் வைத்து 33 வயது நபரை சனிக்கிழமை கைது செய்த காவல்துறையினர், குழந்தைகள் மீதான தீவிர குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உறவினரான அந்த நபர் மீது, தீவிர உடல் காயம் விளைவித்தல் (grievous bodily harm), காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்துதல் மற்றும் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளை வழங்கத் தவறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்நபர், செப்டம்பர் 15-ஆம் திகதி டூவூம்பா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.