ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு ரஷ்யா செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் பயிற்சியில் அமெரிக்காவின் 'டைய்பூன்' (Typhon) ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்துவது தனது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனத் தெரிவித்துள்ள ரஷ்யா, இது குறித்து டோக்கியோவிடம் அதிகாரப்பூர்வமாகப் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானில் செப்டம்பர் 8 முதல் 24 வரை 'ஓரியண்ட் ஷீல்ட்' (Orient Shield) என்ற பெயரில் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது.
ஜப்பானின் 'கியோடோ நியூஸ்' (Kyodo News) செய்தி நிறுவனத்தின்படி, இதில் மூன்று நாடுகளையும் சேர்ந்த 3,700 ராணுவ வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில், SM-6 மற்றும் 'டோமஹாக்' (Tomahawk) குரூஸ் ஏவுகணைகளை ஏவக்கூடிய அமெரிக்காவின் மத்திய தூர 'டைய்பூன்' ஏவுகணை அமைப்புகள் முதன்முறையாகப் பயன்படுத்தப்படவுள்ளன.
விளாடிவோஸ்டாக்கில் (Vladivostok) நடைபெற்ற செய்திக்குறிப்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மரியா ஜாகரோவா (Maria Zakharova) கூறுகையில், ஜப்பான் மீண்டும் அமைதிக்கான கொள்கைக்குத் திரும்ப வேண்டும் என ரஷ்யா விரும்புவதாகவும், ரஷ்யாவின் தூரக் கிழக்கு எல்லைகளுக்கு மிக அருகில் உள்ள ஜப்பானியப் பகுதிகளில் இந்தப் பயிற்சிகள் நடைபெறுவது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மொஸ்கோவில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் திங்கள்கிழமை ரஷ்யா தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.
"எங்கள் நாட்டின் தூரக் கிழக்கு எல்லைகளுக்கு அருகில் இத்தகைய தூண்டுதல்மிக்க ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜப்பான் தரப்பிடம் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று ஜாகரோவா கூறினார்.