நேபாள -திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் சிக்கிய மேலும் 4 ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், காணாமல் போன 38 பேரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை முதல் மொத்தம் 5 ஆஸ்திரேலிய பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நேபாளத்திலும், மற்றொருவர் சீனாவிலும் கண்டறியப்பட்ட நிலையில், எஞ்சிய மூவரும் பேரிடர் பகுதிக்கு வெளியே பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் இருந்து தங்களது குடும்பத்தினருடனோ அல்லது உறவினர்களுடனோ எந்தவொரு தொடர்பும் இல்லாதிருந்தவர்களே புதன்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
செவ்வாய்க்கிழமை வரை 1,050 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், , 3,916 பேரைக் காணவில்லை என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.
அதேவேளை, 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 546 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,066 ஆகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,462 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுவரை குறைந்தது 11,814 பேர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.