சிட்னி நகரில் இருநாட்களில் "தவறான் ஆள் இலக்கு" மூலம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, 'சிட்னி வீதிகளில் சட்டம்-ஒழுங்கு கைமீறிப் போய்விட்டதா?' என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், நிலைமை காவல்துறைeயின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகச் சட்டம்-ஒழுங்கு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு (NSW Police) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் சிட்னியின் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையேயான போரில் சிக்கிப் பலியான 6-வது அப்பாவி நபர் ஜோசுவா மக்டொனால்ட் (Joshua Macdonald) ஆவார்.
இவர் மெரிலேண்ட்ஸ் வெஸ்ட் பகுதியில் பாடசாலையில் இருந்துகுழந்தைகளை அழைத்து வந்தபோதே சுட்டுக்கொல்லப்பட்டார்.
முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், தவறான நபரைக் குற்றவாளிகள் சுட்டுக்கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தின் முற்றத்தில் இரு சிறுவர்கள் இருந்தபோதும், குற்றவாளிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கொல்லப்பட்ட ஜோசுவாவுக்கு எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என்றும், உண்மையான இலக்காக இருந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய நாள், கிளென் அல்பைன் பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், மார்கோ டாபியா என்ற பல்கலைக்கழக மாணவரைச் சுட்டுக் கொன்றது. இதுவும் தவறான முகவரியில் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
பாதாள உலகக் கும்பல்களின் மோதலால் 2020 முதல் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
"இவ்வாறான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என நியூ சவுத் வேல்ஸ் போலீஸ் கமிஷனர் மால் லான்யன் தெரிவித்துள்ளார். மேலும், குற்றக் கும்பல்களை முடக்கக் கூடுதல் போலிஸார் வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், "சிட்னியின் வீதிகளில் குற்றங்கள் எல்லை மீறிப் போய்விட்டன, பொதுமக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்" என எதிர்க்கட்சித் தலைவர் கெல்லி ஸ்லோன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள Taskforce Falcon பிரிவின் தலைவர் ஜேசன் பாக்ஸ், "குற்றவாளிகள் பலரைக் கைது செய்து வருகிறோம், நிலைமை கட்டுப்பாட்டில் தான் உள்ளது" எனக் கூறினார். மேலும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாதாள உலகத் தலைவர்கள், இங்குள்ள இளைஞர்களைப் பயன்படுத்தி இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், சமூக வலைதளங்களில் வதந்திகளையும் அச்சத்தையும் பரப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
"நாங்கள் ஒருபோதும் எங்கள் வீதிகளைக் குற்றக் கும்பல்களிடம் ஒப்படைக்க மாட்டோம்" எனப் போலீஸ் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறை அமைச்சரும் உறுதியளித்துள்ளார்.