மேற்கு ஆஸ்திரேலியாவின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையை முன்னெடுத்துச் செல்லும் உச்ச அமைப்பான Chamber of Arts and Culture - Western Australia அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராக பிரபல இந்திய செவ்வியல் இசைக்கலைஞரும் கலை ஆர்வலருமான யாசோ பொன்னுத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய செவ்வியல் இசைத் துறையிலும் கலை சார்ந்த சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பல ஆண்டுகால நீண்ட அனுபவம் கொண்ட இவர், பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
தனது புதிய நியமனம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள யாசோ பொன்னுத்துரை:
"மேற்கு ஆஸ்திரேலிய கலை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதை பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். இந்திய செவ்வியல் இசைக்கலைஞராகவும் கலை ஆதரவாளராகவும் எனக்குள்ள அனுபவத்தைக் கொண்டு, பல்வேறு பண்பாட்டுச் சமூகங்களை ஒன்றிணைக்க உழைப்பேன்.
அத்துடன், மூலோபாய ஆதரவு, வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக மேற்கு ஆஸ்திரேலியாவின் துடிப்பான கலை-பண்பாட்டுத் துறையை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்."என்றார்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் இயங்கும் பல்லின பண்பாட்டு அமைப்புகளையும் கலைஞர்களையும் ஒன்றிணைத்து, கலைத் துறையின் வளர்ச்சிக்கான கொள்கை வழிகாட்டல்களை வழங்குவதில் இவரது இந்த புதிய நியமனம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.