ஆஸ்திரேலியாவில் அண்மையில் தடை செய்யப்பட்ட நாட்டின் முன்னணி நியோ-நாஜி (Neo-Nazi) இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை, விக்டோரியா மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாட்டின் முக்கிய சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'வெள்ளை ஆஸ்திரேலியா' (White Australia) அல்லது 'தேசிய சோசலிச வலைப்பின்னல்' (National Socialist Network) என்று அழைக்கப்படும் தீவிர இனவாத இயக்கம் தொடுத்துள்ள இந்த வழக்கில், அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வருமாயின் அது பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கு (Anthony Albanese) பெரும் அரசியல் சங்கடத்தை ஏற்படுத்தும்.
இந்த இயக்கத்தைத் தடை செய்யப் பயன்படுத்தப்பட்ட புதிய சட்டங்கள் நீதிமன்ற ஆய்வைத் தாங்கும் என்று அவர் கடந்த மே மாதம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அத்துடன் வன்முறை, குற்றச் செயல்கள் மற்றும் இனவெறிப் போராட்டங்களின் பின்னணியைக் கொண்ட இந்த தீவிரவாதக் குழு, வழக்கு வெற்றியைப் பயன்படுத்தி ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கும் இது வழிவகுக்கும்.
கடந்த ஆண்டு பொண்டி பீச் (Bondi Beach) பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்களின் கீழ், கடந்த மே மாதம் தடை செய்யப்பட்ட இரண்டாவது வெறுப்புக் குழுவாக இந்த 'வெள்ளை ஆஸ்திரேலியா' இயக்கம் அறிவிக்கப்பட்டது.
முறைப்படி ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்ய இவ்வியக்கம் முயன்றபோதே, உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) மூலம் இதற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியலமைப்பு சட்ட வல்லுநர் ஆன் ட்வமி (Anne Twomey), போதுமான ஆய்வுகள் இன்றி கடந்த ஜனவரி மாதம் அவசர அவசரமாக இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.
"வெள்ளை ஆஸ்திரேலியா இயக்கம் வெற்றி பெற்றால் அது அரசுக்குப் பலத்த அரசியல் பின்னடைவாக அமையும். அதேபோல, நமது அரசியலமைப்பு எதிர்பார்க்கும் ஜனநாயக முறைமைக்கு இச்சட்டம் எந்த அளவுக்குப் பொருத்தமானது என்பதும் கேள்விக்குறியே" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தண்டனை பெற்ற குற்றவாளியும் இவ்வியக்கத்தின் தலைவருமான தாமஸ் செவெல் (Thomas Sewell), இந்த வழக்கைப் பயன்படுத்தித் தேவையின்றி விளம்பரம் தேடிக்கொள்வார் என நியூ சவுத் வேல்ஸ் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டத்தரணியுமான ஸ்டீபன் லாரன்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். "உயர் நீதிமன்ற வாசலில் நின்று கொண்டு செவெல் புதிய அரசியல் கட்சியை அறிவித்தால், அது அவர்களுக்கு நாமே தரும் அரசியல் பரிசாக அமைந்துவிடும்" என அவர் எச்சரித்துள்ளார்.
அரசியலமைப்பு சார்ந்த சட்டப் போராட்டங்கள்
செவெல் மற்றும் அவரது இயக்கம் முன்வைக்கும் வாதங்கள் சிக்கலானவை:
இத்தகைய சட்டத்தை இயற்ற கூட்டாட்சி அரசுக்கு அதிகாரம் இல்லை.
இச்சட்டம் அரசியலமைப்பு வழங்கும் மறைமுக அரசியல் பேச்சுரிமையை (implied freedom of political communication) மீறுகிறது.
அரசையும் நீதித்துறையையும் பிரித்து வைக்கும் அதிகாரப் பகிர்வு தத்துவத்தை இச்சட்டம் மீறுகிறது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அரசுத் தரப்பு முன்வைக்கும் வாதம் குறித்து விளக்கிய பேராசிரியர் அந்தோனி கிரே (Anthony Gray), "தடை செய்யப்பட்ட அமைப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளுடன் ஒப்பிடும்போது, பேச்சுரிமை மீதான இந்தத் தலையீடு நியாயமானது என்பதே அரசின் வாதம்" எனக் குறிப்பிட்டார்.
1950-களில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்ய அன்றைய அரசு முயன்ற வரலாற்றுச் சான்றை நினைவுகூர்ந்த பேராசிரியர் ட்வமி, "அன்று கம்யூனிஸ்ட் கட்சியை கலைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தபோது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்" எனக் குறிப்பிட்டார்.
கருத்தியலைத் தாண்டிய சட்டக் கோட்பாடுகள்
வெள்ளை ஆஸ்திரேலியா இயக்கத்தின் கொள்கைகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், நீதிமன்றம் கொள்கை நிலைப்ப்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் ஒரு ஜனநாயகமற்ற அல்லது சர்வாதிகார அரசு இச்சட்டத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதையே நீதிமன்றம் ஆராயும்.
"கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்பது நாம் உடன்படும் அல்லது நியாயமான கருத்துகளுக்கு மட்டுமல்ல, நாம் கடுமையாக எதிர்க்கும் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் பொருந்தும் என்பதில்தான் அதன் உண்மையான சவால் உள்ளது" என பேராசிரியர் கிரே தெரிவித்தார்.
அதேநேரம், ஆஸ்திரேலிய/இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான கவுன்சிலின் இயக்குநர் ஜேமி ஹயாம்ஸ் (Jamie Hyams), இந்தச் சட்டத்தில் சரியான சமநிலை பேணப்பட்டுள்ளதாகக் கூறினார். அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கி ஜனநாயகத்தைச் சீர்குலைக்காமல் தடுக்கும் அதேவேளையில், ஜனநாயக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அதிகாரமும் தேவை எனக் குறிப்பிட்ட அவர், உளவுத்துறையின் (ASIO) ஆலோசனையுடனேயே அரசு செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஒருவேளை உயர் நீதிமன்றத்தில் இவ்வியக்கம் வெற்றி பெற்றாலும், மாற்றுச் சட்ட வழிமுறைகள் மூலம் மீண்டும் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன்பும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு சட்டங்களைத் திருத்தி அமைத்து அரசு வெற்றி பெற்றுள்ளதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் வெற்றி பெற்றால் அது அவர்களின் கருத்தியலுக்குக் கிடைத்த அங்கீகாரமாகாது என்றும், முற்றிலும் அரசியலமைப்பு சார்ந்த குறுகிய வரம்பிற்குள்ளேயே தீர்ப்பு இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.