ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில், சட்டவிரோத கும்பல்களின் உத்தரவின் பேரில் வன்முறையில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, பெரியவர்களுக்கு வழங்கப்படும் அளவிலான கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், பல்கலைக்கழக மாணவர் மார்கோ டாப்பியா (Marco Tapia) மற்றும் 40 வயதான ஜோசுவா மெக்டொனால்ட் (Joshua Macdonald) ஆகியோர் தவறான அடையாளப் புரிதலால் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிலையிலேயே பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதாள உலகக் குழுக்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் கடுமையான புதிய சட்டத் திருத்தங்களை நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns) திங்கட்கிழமை அறிவித்தார்.
"பாதாள உலக வன்முறைகள் எந்தத் தொடர்புமற்ற அப்பாவி பொதுமக்களையும் அவர்களின் குடும்பங்களையும் சீரழித்து வருகின்றன. பிறரின் துயரத்தைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் இத்தகைய வன்முறைக் கும்பல்களின் செயல்கள் மன்னிக்க முடியாதவை; இவற்றைத் தடுத்தே தீருவோம்" என முதல்வர் தெரிவித்தார்.
கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத் திருத்தங்கள்:
கடுமையான தண்டனை: வன்முறைச் சதி மற்றும் கொலை முயற்சிகளுக்கான அதிகபட்சத் தண்டனை 25 ஆண்டுகளில் இருந்து ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படும்.
உடனடிக் கட்டுப்பாடுகள்: நீதிமன்றத்தின் முழுமையான உத்தரவு வரும் முன்னரே, சந்தேக நபர்களின் நடமாட்டம், தொடர்பு மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
சிறுவர்களுக்கான சட்ட மாற்றங்கள்: பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்துதல் மற்றும் தீ வைப்பு போன்ற பாதாள உலகக் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் மீதான வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்குப் பெரியவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும்.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் தலைவர்கள், மிகக் குறைந்த பணத்தைக் கொடுத்து ஆட்களை நியமித்து இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் ஆணையர் மால் லான்யன் (Mal Lanyon), "சில சிறுவர்கள் சிறிய தொகைக்காகத் தங்களின் எதிர்காலத்தைப் பொருட்படுத்தாமல் இக்குற்றங்களில் ஈடுபடுகின்றனர். பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகள் தவறான பாதையில் செல்வது தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், குறியாக்கம் செய்யப்பட்ட (Encrypted) டிஜிட்டல் தளங்கள் மூலம் தொடர்புகொள்ளும் குற்றப் பிணையல்களை ஊடுருவி அழிக்க, பொலிஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்த 15 மில்லியன் டொலர் நிதியொதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இருப்பினும், அரசின் இந்த அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் கெல்லி ஸ்லோன் (Kellie Sloane), "அரசு சட்டங்களையும் செய்திக்குறிப்புகளையும் மட்டுமே வெளியிட்டு வருகிறது. ஆனால், குற்றங்களைக் கட்டுப்படுத்த போதிய விவரங்களோ அல்லது தெளிவான காலக்கெடுவோ இதில் இல்லை" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.