மெல்போர்ன் மேற்கு பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் இரு சிறுவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
அதிக வேகம் அல்லது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியமை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு , பார்வன் பகுதியில் உள்ள நெரோவி மற்றும் பார்வன்-எக்ஸ்போர்ட் சாலைச் சந்திப்பில் 8 பேர் பயணிக்கக்கூடிய வாகனம் (4WD) கவிழ்ந்து பலர் காயமடைந்திருப்பதாக அவசரக்கால சேவைகளுக்குத் தகவல் கிடைத்தது.
மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியையும் மீறி 7 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 11 வயது சிறுவன் இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
34 வயது பெண் ஒருவரும் 7 சிறுவர்களும் பயணித்த அந்த வாகனம், தலைகீழாகக் கவிழ்ந்து சாலையோரப் புல்வெளியில் நின்றது.
காயமடைந்த மற்ற 5 சிறுவர்கள் உயிராபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற பெண் கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்துப் பெரிய அளவிலான விபத்து விசாரணைப் பிரிவின் (Major Collision Investigation Unit) துப்பறிவாளர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் அல்லது ஏதேனும் தகவல்கள் வைத்திருப்பவர்கள் முன்வந்து தகவல் அளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, இந்த விபத்துக்கு அதிவேகமோ அல்லது மதுவோ காரணமில்லை என்று காவல்துறையினர் நம்புவதாக அறிய முடிகிறது.
"இந்த வாகனம் எதிர்பாராத விதமாக உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது; இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது மிகவும் சோகமான ஒரு நிகழ்வு" என்று சம்பவ இடத்திலிருந்த விக்டோரியா காவல்துறையின் டோனி ஜென்டைல் தெரிவித்தார்.