சிட்னி தென்மேற்குப் பகுதியில் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் லூயிஸ் மீஹான் (Louis Meehan) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அண்மைக்காலமாக அங்கு இடம்பெற்றுவரும் ஒப்பந்தப் படுகொலைகளுடனோ அல்லது 'அலமெடின்' (Alameddine) குடும்பத்திற்கும் 'கோகனட் கார்ட்டெல்' (Coconut Cartel) குழுவிற்கும் இடையிலான மோதல்களுடனோ தொடர்புடையது அல்ல என்று காவல்துறை கருதுகிறது.
மாறாக, 32 வயதான லூயிஸ் மீஹானுக்கும் குயின்ஸ்லாந்திலுள்ள சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்களுக்கும் (Bikie gangs) இடையே உள்ள சாத்தியமான தொடர்புகள் குறித்து நியூ சவுத் வேல்ஸ் (NSW) காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
பஞ்ச்போல் (Punchbowl) பகுதியிலுள்ள சமூக மையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் புதன்கிழமை மாலை 5.50 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியேறிய மீஹானை நோக்கி வந்த நபர் ஒருவர், அவரது பெயரை அழைத்து அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார். படுகாயமடைந்த மீஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்தியவர் திருடப்பட்ட சொகுசு காரில் தப்பிச் சென்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மைக்காலத்தில் சிட்னியில் இடம்பெற்ற பிற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் தன்மையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருப்பதாகக் காவல் உதவி ஆணையாளர் கிராண்ட் டெய்லர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வேளையில், அருகில் உள்ள சமூக மையத்தில் சிறுவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததுடன், வீதியின் எதிர்புறமுள்ள தேவாலயத்திலும் பிரார்த்தனைகள் இடம்பெற்று வந்துள்ளன. மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், அவை ஆண்டு சராசரி அளவிலேயே இருப்பதாகவும், இக்கொலைக்குக் காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.