இந்தோனேசியாவின் பாலி தீவுக்குக் கிழக்கே அமைந்துள்ள நுசா பெனிடா (Nusa Penida) தீவில் உள்ள பிரபல சுற்றுலாக் கடற்கரையில், செங்குத்தான பாறையிலிருந்து கீழே விழுந்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலையில், கெலிங்கிங் (Kelingking) கடற்கரைப் பாறையின் தெற்குப் பகுதியில் அவர் சிக்கியிருந்ததாகக் காவல்துறையினரும் அவசர கால மீட்புக் குழுவினரும் தெரிவித்தனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோதிலும், அவர்கள் அவரை அடைவதற்கு முன்பே அந்தப் பெண் செங்குத்தான பாறையிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
"கள நிலவரங்களின்படி, பாதிக்கப்பட்ட பெண் காலை 9 மணியளவில் கீழே விழுந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று நுசா பெனிடா அவசரக்கால மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சக்ரா நெகாரா (Cakra Negara) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
"பாறையின் விளிம்பிற்குச் செல்வதற்கு அவர் தனியான பாதையொன்றைத் தேடிக்கொண்டிருந்தபோதே, தவறிப் பள்ளத்தில் விழுந்துள்ளார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்ப பெண்ணின் சடலம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கிளங்கங் (Klungkung) காவல் அதிகாரி இப்தா ஐ தேவ ந்யோமன் அலிட் பூர்ணவிபாவா தெரிவித்ததாக 'பாலி டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கடல் வழியிலான மீட்பு நடவடிக்கை கைவிடப்பட்டதாகச் சக்ரா நெகாரா தெரிவித்தார். அதற்குப் பதிலாக, ஒன்றரை மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, செங்குத்தான மற்றும் குறுகிய படிகள் வழியே உடலைச் சுமந்து சென்று கெலிங்கிங் கடற்கரையின் பார்வையாளர் பகுதிக்குக் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.
அதன்பின்னர் நுசா பெனிடாவில் உள்ள கிரியா மெடிகா (Griya Medica) மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது உடலில் பல எலும்பு முறிவுகளும் பலத்த காயங்களும் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருவதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.
"இந்தத் துயரமான நேரத்தில் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தனிப்படை உரிமை விதிகள் காரணமாக எங்களால் கூடுதல் கருத்துகளை தெரிவிக்க முடியாது" என்று அத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சமயத்தில் தங்களது தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு அக்குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குயின்ஸ்லாந்து பிரீமியர் டேவிட் கிறிசாபுல்லி (David Crisafulli) அப்பெண்ணின் மறைவு "மிகவும் துயரமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"வாழ்க்கையின் மறக்கமுடியாத ஒரு பயணத்தில், மிகவும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணின் உயிர் இவ்வளவு நொடிப் பொழுதில் பறிபோனது அளவிட முடியாத துயரமாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
"டி-ரெக்ஸ் பீச்" (T-Rex Beach) என்று அழைக்கப்படும் கெலிங்கிங் கடற்கரையானது, பாறையின் உச்சியிலிருந்து கடலோரப் பகுதியின் கண்கவர் அழகைக் காணக்கூடிய பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடங்களில் ஒன்றாகும்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, அங்குள்ள கடற்கரைக்கு இறங்குவதற்காக அமைக்கப்பட்ட 182 மீட்டர் உயர மின்தூக்கி (Elevator) கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டின் இறுதியில் இடைநிறுத்தப்பட்டன.
பாலி ஹோட்டல் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 6.9 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள் பாலிக்கு வருகை தந்துள்ளனர். இதில் 23 சதவீதத்துடன் ஆஸ்திரேலியர்களே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளாகப் பதிவாகியுள்ளனர்.