ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவரைக் குத்திக் கொன்ற வழக்கிலும், மற்றொருவரைப் படுகாயப்படுத்திய வழக்கிலும் 30 வயதான இந்திய வம்சாவளி இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறைக்காலத்திற்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார்.
மெல்போர்ன் ஆர்மண்ட் (Ormond) பகுதியில் கடந்த 2024 மே மாதம், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், 22 வயதான நவ்ஜீத் சிங் சிந்துவைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், 30 வயதான சர்வன் சிங் என்பவரைப் படுகாயப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட ரோபின் ரோபின் (Robin Robin) என்பவருக்கே விக்டோரியா உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இத்தண்டனையை விதித்தது.
ரோபின் தான் தற்காப்புக்காகவே இச்செயலைச் செய்ததாக நீதிமன்றத்தில் வாதிட்டபோதிலும், நடுவர் மன்றம் (Jury) அவரை குற்றவாளியாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரை பிணை பெற முடியாத தண்டனைக் காலத்தையும் (Non-parole period) நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
ரோபின் தனது சகோதரர் புதிய கார் வாங்கியதை நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டாடியபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
அங்கிருந்த சர்வன் சிங் சொல்லாமல் கிளம்பி நவ்ஜீத்தின் வீட்டிற்குச் சென்றதால் ஆத்திரமடைந்த ரோபின், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டி மீண்டும் வருமாறு அழைத்துள்ளார்.
சர்வன் தனது பொருட்களை எடுக்க நவ்ஜீத்துடன் வந்தபோது, ரோபின் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது நண்பனைக் காப்பாற்ற முயன்ற நவ்ஜீத்தையும் அவர் சரமாரியாகக் குத்தியதில் நவ்ஜீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இத்தாக்குதல் எவ்விதக் காரணமுமின்றி நடத்தப்பட்ட ஒன்று என்றும், குற்றவாளிக்குத் தனது செயலுக்காக எந்தவொரு உண்மையான மனவருத்தமும் இல்லை என்றும் நீதிபதி ஆண்ட்ரூ டின்னே (Andrew Tinney) சுட்டிக்காட்டினார்.
தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் ரோபின், தனது தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.