மூன்று ஆண்டுகளில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை 7 லட்சத்து 50 ஆயிரமாகக் குறைக்க 'வன் நேஷன்' (One Nation) கட்சி அறிவித்துள்ள புதிய திட்டத்திற்குத் தொழில் துறைத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பரவலான சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் மற்றும் விசா காலாவதியான பின்னரும் தங்கியிருப்பவர்களை இலக்கு வைத்து இந்த எண்ணிக்கைக் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்று வன் நேஷன் கட்சியின் தலைவர் பாலின் ஹேன்சன் (Pauline Hanson) அறிவித்தார்.
தற்காலிக விசா வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2021-ல் 1.6 மில்லியனாக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் அது 2.9 மில்லியனாக உயர்ந்துள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"வன் நேஷன் கட்சியின் இத்திட்டம், தற்காலிகப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 2017-ஆம் ஆண்டின் அளவிற்கும், சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை 2015-ஆம் ஆண்டின் அளவிற்கும் மீண்டும் கொண்டு செல்லும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்வு (Net Overseas Migration) மறைமுகமான (Net-negative) நிலையை எட்டும். இதன் பின்னர், ஆண்டுக்கு அதிகபட்சமாக 130,000 புலம்பெயர்வோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் உச்சவரம்பு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்" என்று ஹேன்சன் தெரிவித்தார்.
விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும்; தவறினால் ஆயுட்காலத் தடை விதிக்கப்படும் என்றும், பயங்கரவாதம் அல்லது தீவிரப் பாதுகாப்பு அச்சுறுத்தல் கொண்ட நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்வுகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், விசா மேல்முறையீடுகளுக்காக அரசு நிதியில் வழங்கப்படும் சட்ட உதவிகளும் ரத்து செய்யப்படும் என்றார்.
இருப்பினும், இக்கொள்கையின் கீழ் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு 1,00,000-க்கும் அதிகமான சர்வதேச மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்கப்படும் என்றும், தங்குமிடம் வழங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல PALM போன்ற தற்போதைய பருவகாலத் தொழிலாளர் திட்டங்கள் தொடரும்.
"மேலோட்டமான மாற்றங்கள் பாதிப்பைச் சரிசெய்யாது. தற்காலிகமாகப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டி, புலம்பெயர்வு ஆஸ்திரேலியாவிற்குப் பயன்படுவதை உறுதி செய்வதன் மூலம் ஆஸ்திரேலிய மக்களுக்குச் சுவாச இடைவெளி அளிப்பதே இதன் நோக்கமாகும்" என்று ஹேன்சன் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய வணிகக் கவுன்சிலின் (Business Council Australia) தலைமை நிர்வாகி பிரான் பிளாக் (Bran Black) கூறுகையில், 2060-ஆம் ஆண்டிற்குள் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஆண்டுக்கு 140 பில்லியன் டாலர் இடைவெளி ஏற்படும் என்றும், அதைத் திறமையான தொழிலாளர்கள் மூலமே ஈடுசெய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
"எண்ணிக்கையைக் குறைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு தொடங்கப்படும் எந்தவொரு புலம்பெயர்வு விவாதமும் தவறான பாதையிலேயே செல்கிறது.
திறமையான நபர்களை மையமாகக் கொண்டு புலம்பெயர்வுத் திட்டம் அமைய வேண்டும் என்பதிலும், தற்காலிகப் புலம்பெயர்வு அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் நாங்கள் உடன்படுகிறோம்.
ஆனால், 7,50,000-க்கும் அதிகமான மக்களைக் குறைக்கும் ஒன் நேஷன் கட்சியின் முன்மொழிவு, பொருளாதார வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி, ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் பற்றாக்குறையை மேலும் தீவிரமாக்கும் என்பதில் கவலையடைகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ஹேமிஷ் மெக்கன்டயர் (Hamish McIntyre) பேசுகையில், இத்திட்டம் விவசாயிகள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், செலவுகளை அதிகரித்துப் பண்ணை செயல்பாடுகளைப் பாதிக்கும் என்றும் கூறினார். இது இறுதியில் ஆஸ்திரேலிய மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் திறனைப் பாதிக்கும் என்றார்.
"எங்களுக்கு ஆண்டுக்குச் சில லட்சம் 'ஒர்க்கிங் ஹோலிடே' (Working holiday) பயணிகள் தேவைப்படுகிறார்கள்.
நாங்கள் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. ஆஸ்திரேலியாவின் கிராமப்புறப் பகுதிகளில் இந்த வேலைகளைச் செய்ய எங்களுக்கு ஆட்கள் தேவை. கிராமப்புறங்களில் இந்தப் பணிகளைச் செய்யப் போதுமான உள்ளூர் ஆஸ்திரேலியர்கள் தற்போதைக்கு இல்லை" என்று அவர் 'டுடே' (Today) செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.