மெல்போர்னில் உள்ள பாரம்பரிய சிறப்புமிக்க திருமண மண்டபம் ஒன்று தீக்கிரையானதை அடுத்து, மணமக்களின் திருமணக் கனவும், 100-க்கும் மேற்பட்ட விருந்தினர்களின் வருகைத் திட்டங்களும் பாழாகியுள்ளன.
நகரின் கிழக்கே சரே ஹில்ஸில் (Surrey Hills) உள்ள வாட்டில் பார்க் (Wattle Park) பகுதியில் அமைந்துள்ள (Wattle Park Chalet) கட்டடம் 1928-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்நகரின் "முன்னணித் திருமண மண்டபங்களில்" ஒன்றாக இது விளங்கி வந்தது.
சந்தேகத்திற்குரிய வகையில் நேர்ந்த இந்தத் தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு திட்டமிடப்பட்டிருந்த பல கொண்டாட்டங்களும் கேள்விக்குறியாகியுள்ளன.
இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள அதன் உரிமையாளர் மேத்யூ பார்சித் (Matthew Forsyth), இது ஒரு "பெரும் துயரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உணவுகள் தயார் செய்யப்பட்டு, மேசைகள் அலங்கரிக்கப்பட்டுத் தயார் நிலையில் இருந்த சூழலில், கடைசி நேரத்தில் தம்பதியரின் திருமண விழாவை ரத்து செய்ய வேண்டிய மனவேதனைக்கு அவர் தள்ளப்பட்டார்.
"110 விருந்தினர்கள் வரவிருந்த நிலையில் எல்லாமே நாசமாகிவிட்டன. இந்த விஷயத்தை நாங்கள் இன்னும் மணப்பெண்ணிடம் தெரிவிக்கவில்லை; ஆனால் மணமகனுடன் தொடர்பில் இருந்து மாற்று மண்டபத்தைக் கண்டறிய முயன்று வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
காலை 6 மணிக்குப் பிறகு கூரையைத் துளைத்துக் கொண்டு கிளம்பிய தீப்பிளம்புகள், பிரதான மண்டபம், சமையலறை மற்றும் சேவைப் பகுதிகளை முழுமையாகச் சேதப்படுத்தின.
கட்டடம் தீயில் "கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக" விக்டோரியா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் அதிகாரியான கலம் டோனோஹூ (Callum Donoghue) தெரிவித்தார்.
137 ஏக்கர் பரப்பளவிலான பூங்கா நிலப்பரப்பிற்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டடத்தில் தீ எவ்வாறு பரவியது என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
ட்யூடர் (Tudor) கட்டிடக்கலை பாணியில் அமைந்த இந்த மண்டபத்தில் பல ஆயிரக்கணக்கான தம்பதியினர் திருமண வரவேற்புகளை நடத்தியுள்ளனர். மேலும், பல தசாப்தங்களாகப் பள்ளி விழாக்கள், தொண்டு நிறுவன நிதியளிப்பு நிகழ்வுகள், பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற்று வந்துள்ளன.
"பல தீயணைப்பு வாகனங்களின் சைரன் சத்தத்தைக் கேட்டு நாங்கள் விழித்தெழுந்தோம். துரதிர்ஷ்டவசமாக வாட்டில் பார்க் சேலே கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று அப்பகுதிவாசி ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
காலை 6.40 மணியளவில் இத்தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்துள்ள காவல் துறையினர், இதனைச் சந்தேகத்திற்குரிய விபத்தாகக் கருதி விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.