மெல்போர்னின் மேற்குப் பகுதியில் நேற்றிரவு இளம்பெண் ஒருவர் தலையில் மிதிக்கப்பட்டு, பலமுறை கத்தியால் குத்தப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தொடர்பாக நேரில் பார்த்த சாட்சிகள் முன்வருமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
டீர் பார்க் (Deer Park) பகுதியில் உள்ள ராபர்ட் புரூஸ் பூங்காவில் (Robert Bruce Reserve) நேற்றிரவு 7:15 மணியளவில் இளைஞர் குழுக்களிடையே மோதல் நடப்பதாக வந்த தகவலை அடுத்து விக்டோரியா மாநில காவல்துறை விரைந்தது.
அங்கு 18 வயதுமிக்க இளம்பெண் ஒருவர் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான காணொளியில், அந்த பெண் மண்டியிட்டு அமர்ந்திருந்தபோது அவரது தலையில் மிதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக கத்தியால் குத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.
அவர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, தற்போது ஆபத்தான கட்டத்தைக் தாண்டி சிகிச்சையில் உள்ளார்.
இச்சம்பவத்தில் 20 வயது பெண் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார், ஆனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படவில்லை.
இணைய வழியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு குழுக்களும் அந்தப் பூங்காவில் சந்தித்ததாகவும், அப்போது இந்த இரு பெண்களும் தாக்கப்பட்டதாகவும் துப்பறியும் அதிகாரி அலி சாமி (Ali Samie) தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் அவரைத் தலையில் மிதித்து, அவரது உடலின் மேல் பகுதியில் 6 முறை கத்தியால் குத்தியுள்ளனர். இளைஞர்கள் இதுபோன்ற கத்திகளுடன் சுற்றித்திரிந்து தாக்குவது கொடூரமானது" என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தில் இருந்து மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நவம்பரில் நடைபெறும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், கத்திகளை வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களைச் சோதனையிட காவல்துறையினருக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டத்தைக் கொண்டுவரப்போவதாக விக்டோரியா அரசு அறிவித்த அடுத்த நாளே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.