மெல்பேர்ண் கிழக்கு பகுதியில் காளான் உட்கொண்டதால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், விஷக் காளான் தொடர்பில் விக்டோரிய மாநில சுகாதாரத்துறை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
98 வயதான வயோதிப பெண்ணொருவர் உணவு உட்கொண்ட பிறகு கடந்த மே மாதம் உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பில் பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. மரண பரிசோதனை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் அவர் விஷக் காளான் உட்கொண்டதால் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
தனது வீட்டு தோட்டத்தில் இருந்த காளானையே அவர் சமைத்து உட்கொண்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகனும் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று தற்போது குணமடைந்துள்ளார்.
இந்நிலையிலேயே காட்டு காளான் தொடர்பில் மக்கள் மத்தியில் போதுமானளவு எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என சுகாதார துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.