உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கையில் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி நேற்றோடு 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு தகர்ந்துள்ளது.
இதனிடையே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது. எனினும், இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தற்போது அமெரிக்க ஜனரிபதி ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும் பட்சத்தில் ரஷ்யாவுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். இந்த சூழலில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவின் இந்த தீர்மானம் காரணமாக, ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
அதேவேளை அணு ஆயுத பயன்பாட்டுக்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா தொடுத்துள்ள சட்டவிரோத போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும், ஐ.நா. சாசனத்தைமீறி செயற்படும் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.