கவல் கணன்
அண்மையில் நண்பர்கள் இருவர் , நாட்டின் உள்ளூர் பிரதேசங்களில் வாழும் பூர்வீக மக்கள் சிலரை சந்திக்கசென்று வந்த பயணம் பற்றி சிலாகித்துப்பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பூர்வீக பின்னணி கொண்ட கலைஞருடன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தவேளை, ஒருபெண் அவர்களை இடைமறித்து அந்தப்பூர்வீக கலைஞரின் பெயருடன் “அண்ணா” என்பதையும் சேர்த்து விளித்ததாகவும் அதனால் ஆச்சரியப்பட்ட அவர்கள் அதுபற்றிக்கேட்டபோது, சகோதரனை அவர்கள் மொழியில் “அண்ணா” என்று அழைப்பார்கள் என்று அந்த கலைஞர் கூறியிருக்கிறார். ஆர்வம் மேலோங்க, அந்தப்பெண்ணை, இந்தக் கலைஞர் எப்படி அழைப்பார் என்றுகேட்டதற்கு, “அண்ணி” என்று அவர் பதில் அளித்திருக்கிறார் அந்தக்கலைஞர்.
“ஆஹா பார்த்தீர்களா, தமிழ்மொழி ஆஸ்திரேலிய பூர்வீக மொழிகளில் எவ்வளவு கலந்து இருக்கிறது” – என்று அப்படி அவர்கள் சிலாகித்துப் பேசியது சில சிந்தனைகளைத் தூண்டியது.
அண்மையில், வேர்ச்சொல்லாய்வில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்தபோது, ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின்மொழி அனைத்துமே தமிழிலிருந்து தோன்றியவை என்று கூறியுள்ளார்.
அப்படியானால்,ஒரு சில சொற்களை மட்டும் வைத்து 800க்கும் அதிகமான மொழிகள் பேசுகின்ற ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் பற்றி இப்படியான கணிப்பை, அறுதியிட்டுக் கூறுவது சரிதானா என்ற கேள்வி பிறக்கிறது.
சிலப்பதிகாரம் அணங்கு
அதுபோக , வட்ஸ் அப்பில் (பெயர்ச் சொற்களைத் தமிழ் மொழி மாற்றம் செய்வதில் பெரிய உடன்பாடு எனக்கில்லை) ‘அணங்கு’ என்ற ஆஸ்திரேலிய பூர்வீக குடி மக்கள், தமிழ் சந்ததியினரின் வழிவந்தவர்கள் என்ற ஒரு கருத்துப் பரிமாற்றமும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. சரி, அந்த ஒரு சொல்லை சற்று விரிவாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
“அணங்கு” என்ற பெயர்ச் சொல்லிற்கு அழகு, வடிவு, தெய்வம், தெய்வமகள், தெய்வத்திற்கு ஒப்பான மாதர், வருத்திக்கொல்லும் தெய்வ மகள், தீண்டி வருத்தும் தெய்வப்பெண், வருத்தம், நோய், மையல்நோய், அச்சம், வெறியாட்டு, பத்திரகாளி, தேவர்க்காடும் கூத்து, விருப்பம், மயக்கநோய், கொலை, கொல்லிப்பாவை, மற்றும் பெண் என்று பல்வேறு கருத்துகளும் –
“அணங்குதல்” என்னும் வினைச் சொல்லிற்கு ஒலித்தல், விரும்புதல், அண்டுதல், அஞ்சுதல், வருந்தல், வருத்துதல், நோயுறுதல் போன்ற பல பொருள்கள் இலக்கியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
திருக்குறளின் காமத்துப்பாலில், 1081 ஆம் குறள் தலை மகனது மனத்தை வருத்தும் பெண் தெய்வ மகளோ? மயிலோ? மண்மகளோ? என மனம் மயங்கி, அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர் கொல்மாலும் என் நெஞ்சு என்றும், அதற்கு அடுத்த குறளில், அவளின் எதிர்ப் பார்வை தெய்வமகள் படையோடு தாக்குவது போன்றது என்ற பொருளில் நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து என்றும் திருவள்ளுவர் பாடிச் சென்றுள்ளார்.
மலையின் ஒரு பகுதியில் இடம்பெற்ற “அணங்கு” போன்ற பெண் தெய்வம் அல்லது தெய்வத்தால் வரையப்பட்ட பாவை, கொல்லிப்பாவை என அறியப்படுகிறது.சேர மன்னனின் ஆட்சிக் குட்பட்டிருந்த ஒரு மலையின் மேற்குப் பகுதியில் வருத்தக்கூடிய கொல்லித் தெய்வம் இருந்ததென்று குறுந் தொகையில் 130 ஆவதுபாடலில்:
முருகன் அணங்கு
“பெரும்பூண் பொறையன்பே எமுதிர்கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய நல்லியற்பாவை”
என்று பாடப்பட்டிருக்கிறது.
தமிழ் மன்னர்களான சோழர்களும் சேரர்களும் பாண்டியர்களும் மற்றும் சிற்றரசர்கள் பலரும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது வரலாறு.
(அப்படியான வரலாறு இன்றும் தொடர்கிறது, ஆனால் அதற்குள் நாம் செல்லவில்லை).
ஆனால், அவர்களுக்கிடையில் திருமணங்களும் நடந்திருக்கின்றன. அப்படி ஒரு நிகழ்வு,ஒட்டக்கூத்தர் என்ற மாபெரும் கவியால் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கனுக்கு மணமகள் பாண்டிய இளவரசியே என நினைத்து, பெண்கேட்டு மதுரைக்குச்சென்ற ஒட்டக்கூத்தர், பாண்டிய மன்னனைச் சந்தித்து, தான்வந்த நோக்கத்தைக் கூறுகிறார். தன்னுடைய பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பும் சோழனுக்கு என்ன சிறப்பு என்று பாண்டிய மன்னன் கேட்க, அனைத்துக் கவிஞர்கள் போலவே, ஒட்டக் கூத்தரும் சற்று மிகைப்படுத்தி, தனது சோழ மன்னனின் பெருமையை இவ்வாறு பாடுகிறார்:
கோரத்துக்கொப்போகனவட்டம்மானே
கூறுவதுங்காவிரிக்குவையையோவம்மானே
ஆருக்குவேம்புநிகராகுமோவம்மானே
ஆதித்தனுக்குநிகரம்புலியோவம்மானே
வீரர்க்குள்வீரனொருமீனவனேவம்மானே
வெற்றிப்புலிக்கொடிக்குமீன்கொடியோவம்மானே
ஊருக்குறந்தைநிகர்கொற்கையோவம்மானே
ஒக்குமோசோணாட்டைப்பாண்டியநாடம்மானே.
கோரம் என்னும் சோழரின் குதிரைக்கு கனவட்டம் என்னும் பாண்டியர்கு திரை நிகராகுமா? நீர் நிறைந்த காவிரிக்கு நீர் இல்லாத வைகை ஈடாகுமா? சோழ மன்னர்கள் மார்பில் சூடும் அத்தி மாலைக்குப் பாண்டிய மன்னர்கள் தரிக்கும் வேப்பம் பூமாலை ஈடாகுமா? சோழன் குலம் சூரியகுலம், பாண்டியர்கள் குலம் சந்திரகுலம், சூரியனுக்குச் சந்திரன் ஈடாகுமா? வீரர்களுள் சிறந்தவன் பாண்டியனோ? சோழனோ? புலிக்கொடிக்குமுன் மீன் கொடி ஒப்பாகுமா? சோழ நாட்டின் தலைநகரான உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் தலைநகரான கொற்கை நகர் ஈடாகுமா? இப்படி எல்லா வகையிலும் சிறந்த சோழநாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமா?என்று கேட்கிறார் ஒட்டக் கூத்தர்.
இதனைக்கேட்ட பாண்டிய மன்னனின் அவைப்புலவர் புகழேந்தி, என் பாண்டிய அரசைத் தாழ்த்தி ஒட்டக்கூத்தர் பாடுவதா எனஉணர்ச்சி மேலிட, அதற்கு எதிர்ப்பாட்டாக ஒரு பாடல் பாடுகிறார்.
(இப்போது ஊடகங்கள் வழியாகவும் சமூகவலைத்தளங்களுடாகவும் வெவ்வேறு அரசியல் கட்சி சார்ந்தவர்கள் இப்படி அடித்துக்கொள்வது உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.)

திருநெடுமால் அவதாரம் சிறுபுலியோவம்மானே
சிவன் முடியில் ஏறுவது செங்கதிரோவம்மானே
ஒருமுனிவனேரியிலோவுரைதெளித்ததம்மானே
ஒப்பரியதிருவிளையாட்டுறந்ததையிலோவம்மானே
கரையெதிரல்காவிரியோவையையோவம்மானே
கடிப்பகைக்குத்தாதகியங்கண்ணியோவம்மானே
பரவைபணிந்ததுஞ்சோழன்பதந்தனையோவம்மானே
பாண்டியனார்பராக்கிரமம்பகர்வரிதேயம்மானே
திருமால் மீன் அவதாரம்தான் எடுத்தார், புலி அவதாரம் அல்ல. சிவபெருமான் தன்தலையில் சூடியது சந்திரனைத்தான், சூரியனை அல்ல. அகத்தியன் தமிழ் உரைத்தது பாண்டியத்தில் உள்ள பொதிகையில்தான், சோழத்து நேரி மலையில் அல்ல.சிவனின் திருவிளையாடல் மதுரையிலே, உறையூரில் அல்ல. ஏடுகள் நீரோட்டத்திற்கு எதிராகச் சென்றது வைகையில்தான், காவிரியில் அல்ல.பேய்பகையை விரட்டுவது வேம்புதான், ஆத்தி அல்ல. கடலானது பாதம் பணிந்தது பாண்டியனிடம், சோழனிடம் அல்ல. எம் பாண்டியனார் பெருமை அளவிட்டுச்சொல்ல இயலாது–என்று பாடவும் –
அதனைக் கேட்ட ஒட்டக்கூத்தரும் விடுவதாக இல்லை. சோழனது பட்டத்து யானையின் காலில் கட்டியுள்ள சங்கிலி அவிழ்க்கப்பட இரண்டு காரணம் உண்டு. கலிங்கத்தில் பகை இன்னும் மிச்சமிருக்கலாம் அல்லது பாண்டிய நாட்டை சீரழிக்கும் முடிவாக இருக்கலாம் என்று ஒட்டக்கூத்தர் இவ்வாறு பாட:
இன்னம்கலிங்கத்தில்வேந்தர்உண்டென்றோ
தென்னவன்தமிழ்நாட்டைசீறியோ – சென்னி
அகளங்காஉன்தன்அயிராவதத்தின்
நிகளங்கால்விட்டநினைவு
கோபம்கொண்டபுகழேந்தி, தெற்குப் பகுதி மக்களின் தலைவனான பாண்டியனது
மதுரையில் இருக்கும் (பாண்டிய) பட்டத்து யானையின் காலில் உள்ளகயிற்று முடிச்சும், பொன்னி நாட்டில் இருக்கும் கற்புடைய சோழ மகளிரின் கழுத்தில் உள்ள தாலி முடிச்சும் ஒன்றேயாகும்–அதாவது பாண்டியனது யானையின் காலில் உள்ள முடிச்சு அவிழ்ந்தால், சோழப் பெண்களின் தாலி முடிச்சு அவிழும் என்று எதிர்ப்பாட்டு பாடுகிறார்:
தென்னவன் தென்னர் பெருமான்திறல் மதுரை
மன்னவன்கோக்களிற்றின்வல்லிக்கும் – பொன்னிநாடு
ஆலிக்கும்வேந்தாம்அபயகுலன்மகளிர்
தாலிக்கும் ஒன்றேதளை
பல வீடுகளில் தற்போதும் நடப்பதுதான். சம்பந்தம் பேசவந்த இடத்தில், சம்பந்தமே, ல்லாத இருவர் சம்பந்தமே இல்லாமல் எதையாவது பேசி, அந்த சம்பந்தத்தைக் கலைத்திருக்கிறார்கள் என்பதை நாம் அனுபவித்திருக்காவிட்டாலும் மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.
சரி, இந்தப்பாடல்களில் ‘அணங்கு’ எங்கே வந்தது என்று கேட்டால், சற்று பொறுமை காக்கும்படி கோருகிறேன். அதற்கு இந்த முன்னுரை அவசியம்.
ஒரு வழியாக சமாதானம் செய்து, சோழ மன்னனுக்கும் பாண்டிய இளவரசிக்கும் திருமணம் நடந்து தாய் வீட்டுச் சீதனமாக புலவர் புகழேந்தியும் சோழ நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகிறார். ஆஹா அருமையான சந்தர்ப்பம் என்று, சோழநாடுவந்த புகழேந்தியை சிறையில் அடைத்தார் ஒட்டக்கூத்தர்.
இதனைக் கேள்விப்பட்ட பாண்டிய இளவரசி, கடும் கோபத்துடன் அந்தப்புரக் கதவைச்சாத்தி தாழ்ப்பாள் போட்டு விட்டாள். அந்தப்புரம் வந்த மன்னனுக்குக் கதவு திறக்கப்படவில்லை.தமிழ் சினிமாவில் வருவதுபோல், (இதைக்கேள்விப்பட்டு) ஒட்டக் கூத்தரும் அந்தப்புரம் ஒடோடி செல்கிறார். உடனே ஒரு பாடல்:
நானேயினியுனைவேண்டுவதில்லைநளினமலர்த்
தேனேகபாடந்திறந்திடுவாய்திறவாவிடிலோ
வானேறனையவிரவிகுலாதிபன்வாயில்வந்தாற்
றானேதிறக்குநின்கையிதழாகியதாமரையே
“நான் இனி உன்னை வேண்ட மாட்டேன். நீயே கதவைத் திறந்திடு. திறக்காவிட்டால், சூரியன் வந்தால் தாமரை மலருமல்லவா அதுபோல, சூரிய குலவேந்தன் வாயிலுக்கு வந்தால் உன்கைத்தாமரைதானே திறக்கும்” – என்ற பொருளில் பாடினாலும் இளவரசி கதவைத் திறப்பதாக இல்லை. தான் செய்த செயலால் தான் இளவரசி கோபம் கொண்டுள்ளார் என்பதை இறுதியில் உணர்ந்த ஒட்டக்கூத்தர் (அவராகவே உணர்ந்தாரா அல்லது அரசர் கட்டளையிட்டாரா என்பது இலக்கியத்தின் மூலம் தெரியவில்லை) புகழேந்தியை சிறையிலிருந்து விடுவிக்கச் சொல்லி, புகழேந்திமூலமாக இளாவரசியார் கதவை திறக்கச்செய்ய, அவர் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
புகழேந்திஉடனே–
ஒன்றிரண்டு அணிகலன்களாலும், ஒன்றிரண்டு‘வள்ளைப்பூ’சூடியதாலும் இடைஆட, அதனோடு ஆடும்விழிகளை உடையவளே , மழைபோல்வழங்ககும்ஒன்றிரண்டுகைகளைஉடையசோழன்மானத்தைஅணிகலனாகப்பூண்டிருப்பவன். அவன்ஒன்றிரண்டுபிழைசெய்தால்நல்லகுடியில்பிறந்தசோழன்தேவிபொறுத்தருளமாட்டாராஎன்றகேள்வியைப்பாட்டாக:
இழையொன்றிரண்டுவகிர்செய்தநுண்ணிடையேந்துவள்ளைக்
குழையொன்றிரண்டுவிழிஅணங்கேகொண்டகோபந்தணி
மழையொன்றிரண்டுகைமானாபரணனின்வாயில்வந்தாற்
பிழையொன்றிரண்டுபொறாரோகுடியிற்பிறந்தவரே.
என்று பாடியதாக தமிழ் இலக்கியத்தில் உள்ளது. ஆனால், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள், இவையெல்லாம் வெறும் கற்பனை கதைகளே என்று சில ஆய்வாளர்கள்வாதிடுவதும் உண்டு.
அகநானூறில் இடம்பெற்றிருக்கும் 207ஆவதுபாடலில்:
அணங்குடைமுந்நீர்பரந்தசெறுவின்
உணங்குதிறம்பெயர்ந்தவெண்கல்அமிழ்தம்
குடபுலமருங்கின்உய்ம்மார்இ புள்ளோர்த்துப்
படைஅமைத்துஎழுந்தபெருஞ்செய்ஆடவர்
நிரைப்பரப்பொறையநரைப்புறக்கழுதைக்
குறைக்குளம்புஉதைத்தகற்பிறழ்இயவு
கடலின் நீர்பரவிய உப்பளத்தில் விளைந்து நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை மேற்குத்திசையிலுள்ள நாடுகளுக்குக் கொண்டு சென்றுவிற்பதற்காக, வீரமிக்க ஆடவர் நல்ல நிமித்தம் பார்ப்பார்கள் என்றும், அது தெரிந்தவுடன் படைகளை ஆயத்தம் செய்து உப்பு மூட்டைகளை வெண்மையான முதுகை உடைய கழுதைகளின்மீது ஏற்றிக்கொண்டுசெல்வர் என்றும் மலைச்சாரலில் அவை செல்லும் போது குளம்புகள் உதைப்பதால் கற்கள்பிறழ்ந்து கிடக்கும் என்றும் அப்படிப்பட்ட கொடுமையான பாலை நிலவழியில் தனது மகளை அழைத்துக்கொண்டு போயிருக்கிறானே கொடுமைக்காரன் என்று வளர்ப்புத்தாய் புலம்புவதாகப் பாடப்பட்டிருக்கிறது.
புறநானூறில் இடம்பெற்றிருக்கும் 299 ஆவது பாடலில் சிற்றரசன் ஒருவனுக்கும் பெரு மன்னன் ஒருவனுக்கும் போர்நடந்தது என்றும், அந்தப்போரில், சிற்றரசனின் குதிரைகள் சிறப்பாகப்போர் புரிந்தன என்றும் மன்னனின் குதிரைகள் போருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தன என்றும் பொன் முடியார் என்ற கவிஞர் இவ்வாறு பாடுகிறார்:
பருத்திவேலிச்சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்டஓய்நடைப்புரவி
கடல் மண்டு தோணியின்படைமுகம்போழ
நெய்ம்மிதி அருந்தியகொய்சுவல்எருத்தின்
தண்ணடைமன்னர்தாருடைப்புரவி
அணங்குஉடைமுருகன்கோட்டத்துக்
கலம்தொடாமகளிரின்இகழ்ந்துநின்றவ்வே.
நல்ல வளமான உணவு உண்ணாததால் சிற்றூர் மன்னனின் குதிரைகள் தளர்ந்த நடை உடையனவாக இருந்தன என்பதை “ஓய்நடைப்புரவி” என்று பாடுகிறார் புலவர். காதலனைப் பிரிந்து வாடும் பெண், உடல்மெலிந்து, பொலிவிழந்துகாணப்படும்பொழுது, முருகன் அவளைவருத்துவதாக அவள்தாய்கருதி, வெறியாட்டு நடத்தி முருகனை வழிபடுவது சங்ககால மரபு. அதனால், அணங்கு என்ற சொல்லுக்கு வருத்தம் என்று பொருள்பட, “அணங்குடை முருகன் கோட்டம்” என்கிறார் அவர்.
ஒரு சில காலமாக சர்ச்சையை உருவாக்கியுள்ள கந்தபு ராணத்திலும் ‘அணங்கு’ என்ற சொல்:
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க! – வெற்பைக்
கூறுசெய்தனிவேல்வாழ்ககுக்குடம்வாழ்க! – செவ்வேள்
ஏறியமஞ்சைவாழ்கயானைதன்அணங்குவாழ்க!
மாறில்லாவள்ளிவாழ்க! வாழ்கசீர்அடியார்எல்லாம்!
முருகனின் பரந்த தோள்கள் பன்னிரண்டும் வாழ்க. ஆறுமுகமும், மலையைப் பிளக்கும் சிறந்த வேலும் வாழ்க. சேவலும், அவன் வலம் வரும் மயிலும் வாழ்க. தெய்வானையும், வள்ளியும் வாழ்வார்களாக. அடியவர்களும் நல்வாழ்வு வாழட்டும் என்று கச்சியப்பர் பாடியுள்ளார்.
ஆறுமுக நாவலர் கருத்துப்போர்தொடுத்த இராமலிங்க வள்ளலார் எழுதிய அகவல் பாடல்களில்
குணங்குறி முதலியகுறித்திடாதெனையே
அணங்குஅறக்கலந்தஅன்புடைநட்பே
என்னுடைய குணம் எப்படிப்பட்டது என்னுடைய வாழ்க்கை இலட்சியம்குறிக்கோள் என்பனயாவை என்பவற்றைக் கவனிக்காமல் என்னைப் பிரியாது என்னுடன் கலந்துள்ள நட்பே என்று இறைவனை விழிக்கும்போது, அணங்கு என்ற சொல்வினைச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்படி எத்தனையோ பாடல்களில் அணங்கு என்ற வார்த்தை தமிழ் மொழியில் பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தசொல் தமிழ் இலக்கியத்தில் மட்டும் தான் காணப்படுகிறதா என்றால் அதுதான் இல்லை. எனது சிறு ஆராய்ச்சியிலேயே கிரேக்க மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இந்த சொல்லின் பயன்பாட்டைக்காணக் கூடியதாக இருக்கிறது.
ஜப்பானிய மொழியில் அவர்களது தற்காப்புக் கலைகளில் ஒன்றானக ராட்டேயில் பயன்படுத்தப்படும் கட்டாஎ ன்ற நிலைகளில் ஒன்று அணங்கு. முன்கால் வளைந்த நிலையில், வில்போன்ற நிலைப்பாட்டின் பெயர் அணங்கு. “தெற்கிலிருந்து வெளிச்சம்” அல்லது “தெற்கிலிருந்து அமைதி” என்ற பொருள்கொண்டது என்று மொழி அகராதிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நிலையை வடிவமைத்த ‘சொட்டோக்குகியான் ’என்பவர்தை வான் நாட்டிற்குப் பயணம் சென்று திரும்பிய பின்னர் அறிமுகப்படுத்திய தாகக்கருதப்படுகிறது. இந்தநிலை தாக்கவும் தடுக்கவும் பயன்படுத்தப்படுவதால் மற்றைய நிலைகளைவிட மிகவும் வித்தியாசமான நிலை என்று தற்காப்புக் கலைஞர்கள் கூறுவார்கள்.
பண்டைய கிரேக்க மதத்தில் அணங்கு என்பது ‘சக்தி’, ‘கட்டுப்பாடு’, ‘அவசிய தேவை’ என்ற பொருளில்தவிர்க்கமுடியாததன்மை, நிர்ப்பந்தம் மற்றும் அவசியத்தின் ஆளுமை என்ற கடவுளாகச் சித்தரிக்கப்படுகிறாள்.
அணங்கு மற்றும் அவரது சகோதரரும் கணவருமானக் ரோனோஸின் பிறப்புடன் (சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளது. கிரேக்க இதிகாசங்களில் பல சகோதர- சகோதரி திருமணங்கள் நடந்துள்ளன) பிரபஞ்சமும் குழப்பமும் ஆரம்பமாகின. விதி மற்றும் சூழ்நிலையின் மிகசக்தி வாய்ந்த சர்வாதிகாரியாக அணங்கு கருதப்படுகிறார்.
மனிதர்களும் தெய்வங்களும் அவளுடைய சக்தியை மதித்து அவளுக்கு மரியாதை செலுத்தின. சில நேரங்களில் விதிகளின் தாயாகக் கருதப்படுபவர் அணங்கு. சில ஆதாரங்களின்படி, ஆரம்ப கால கிரேக்க புராணங்களுடன் அவற்றின் தோற்றத்தை சாத்தியமாக்க போதுமானதாக அணங்கு பிணைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அடையாளங்களில் ஒன்றான உலுறுமலை, ஒரு தனிபாறையால் ஆனது. அதனை சுற்றி வாழும்மக்கள் தங்களை “அணங்குமக்கள்” என்று அடையாளம் காட்டுகிறார்கள்.
அதனை சுற்றிவாழும் உயிர்களையும் அந்தசுற்றுச் சூழலையும் உயிருடனும் உயிர்ப்புடனும் மற்றும் வலுவாகவும் வைத்திருப்பது அவர்கள் தலையாய கடமை என்று அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
தமது படைப்பு மூதாதையர்களால் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டன என்றும் அவர்களது பயணங்களில், அவர்கள் நிலத்தில் நெறிமுறைகளை விட்டுச்சென்றுள்ளார்கள் எனவும் தமது வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்களை உருவாக்கினார்கள் என்றும் இந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கும் பெயர் அணங்கு.
இதேவேளை, தமிழகத்தில் இருந்து தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, பர்மா போன்ற பகுதிகளில் ஆமை வழி நீரோட்டம்மூலம் கடல் வழிப்பயணம் மேற்கொள்ளப்பட்டது என்றும், அதன் வழியாக ஆஸ்திரேலியாவுக்கும் தமிழர்கள் பயணப்பட்டனர் என்றும் ஒரிஸ்ஸா பாலு போன்ற ஆய்வாளர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளார்கள்.
பூமிமேற்கிலிருந்து கிழக்கு நோக்கிசுற்றுவதன் காரணமாக, ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் தமிழகம் திரும்ப அக்காலத்தில் சரியான வழிப்பாதை கண்டறியப்படவில்லை என்றும் அதனால், பலர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்தனர் என்றும் அது காரணமாக ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் தொன்மம் பரவமுக்கிய காரணமாக அமைந்திருக்கும் என்றும் ஆஸ்திரேலிய பூர்வீக குடியினமக்கள் தமிழர்களுடன் கலப்பினமக்களானார்கள் என்றும் அவர் வாதிக்கிறார்.
அதற்கு டி.என்.ஏ அல்லது தாயனை ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.அதில் உண்மை இருக்கலாம்.
பூர்வீக குடியின மக்களின் வாழ்வியல் முறையில் தமிழர்கள் தொன்மங்கள்நி றைந்துள்ளன. இவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள் – குறிப்பாக, திருமணமுறை, சடங்குகளில் பாடப்படும் பாடல்கள், வேட்டைமுறை, கல்வி போதிக்கும்முறை, திருவிழா நிகழ்வுகள் போன்றவை தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றி உள்ளது உண்மைதான்.
ஆனால், அதற்காக அணங்கு மக்கள் தமிழ் மக்கள்தான் என்று எப்படிச் சொல்ல முடியும் என்பதுதான் நான் முன்வைக்கும் கேள்வி.
கலாச்சாரம் என்பது ஒரு ஓடும் நதி போன்றது. அங்கிருந்தும் இங்கிருந்தும் பலவற்றைப் பொறுக்கியும், சிலவற்றைத் தரையில் தங்கவிட்டும் நதி ஓடிக்கொண்டே இருப்பதைப்போல, கலாச்சாரக் கூறுகளும் பொறுக்கப்பட்டும் பகிரப்பட்டும் வந்திருக்கின்றன.
மொழியும் அப்படித்தானே?
தற்காலத்திலே யே நாம் எத்தனை சொற்களை இரவல் வாங்கிவிட்டோம், எத்தனை எமக்குத் தெரியவே ஆங்கிலத்தில் கலந்துள்ளன? (இந்தக் கட்டுரையில் ஆங்கில சொல் இல்லாமல் எழுத முயற்சி செய்தேன்…. ஆனால், முடியவில்லை.) மொழியியல் ஆய்வாளர்கள் அவற்றிற்கான சான்றுகளை இலக்கியத்தில், கல்வெட்டுகளில் அகழாய்வுகளில் கண்டெடுத்து எம்முடன் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், அதில் சில மிகைப்படுத்தல்கள் தேவைதானா என்பதுதான் எனது கேள்வி.
“அணங்கு” என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம். தமிழிலேஅது எத்தனை பொருள்பட பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கியுள்ளேன். அதேசொல், கிரேக்க மொழியில் ‘சக்தி’, ‘கட்டுப்பாடு’, ‘அவசியதேவை’ என்ற பொருளில் தவிர்க்க முடியாத தன்மை, நிர்ப்பந்தம் மற்றும் அவசியத்தின் ஆளுமை என்று கூறப்படுகிறது. தமிழில் அந்த அர்த்தமே இல்லை.
ஜப்பானிய மொழியில், தாக்கவும் தடுக்கவும் பயன்படுத்தப்படும் ஒருதற்காப்புநிலை என்ற பொருளில் அணங்கு பயன்படுகிறது. ஜப்பானிய கராட்டேயும் களரிப் பயிற்று என்ற போர்க்கலையிலிருந்து பெறப்பட்டது தானே என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். போர்,வீரம், தற்பாது காப்பு என்ற பொருள் பட அணங்கு என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் இல்லை.
ஆஸ்திரேலியப் பூர்வீககுடி மக்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் இருந்தாலும், அணங்கு மக்களுக்கும் தமிழ் மொழியிலுள்ள ‘அணங்கு’ என்ற சொல்லிற்கும் எந்தவித சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டதாகக் கூறப்படும் புறப்பொருள் வெண்பாமாலையில் இரண்டாவது படலத்தின் பதிமூன்றாவது சூத்திரமான ‘குடிநிலை’ யில் வருகின்ற
பொய் அகல நாளும்புகழ்விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்தவயங்குஒலிநீர் – கையகலக்
கல்தோன்றிமண்தோன்றாக்காலத்தேவாளொடு
முன்தோன்றிமூத்தகுடி
என்றபாடலின், “கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தேவாளொடு முன்தோன்றி மூத்தகுடி” என்ற வரிகளை மட்டும் மேடைகளில் பேசிவந்தால் போதுமா?
பொய் அகன்று , நாம் புகழுடன் வாழ நம் எதிர்கால சமூகம் எப்படி முன்னேறலாம், எவற்றை சாதிக்கலாம் என்று சிந்திப்பது அவசியமா? அணங்கு என்பதற்கு விரும்புதல் என்றும் ஒருபொருள் இருக்கிறது. எனது விருப்பம் அதுவே.
முற்றும்