இஸ்ரேலின் முன்னாள் நீதி அமைச்சர் அய்லெட் ஷேக்கின் விசா விண்ணப்ப கோரிக்கையை ஆஸ்திரேலியா நிராகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு இஸ்ரேல் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய, இஸ்ரேல் யூத விவகார கவுன்ஸிலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக அய்லேட் ஷேக், கன்பரா வழங்க திட்டமிட்டிருந்தார்.
இதற்காக விசாவுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். எனினும், அவரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் தெளிவுப்படுத்தப்படவில்லை.
அவரின் வருகை ஆஸ்திரேலிய சமூகங்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கலாம் என்ற காரணத்தால் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
'எனக்கு விசா கிடைக்கவில்லை என்பது பிரச்சினை அல்ல, ஆஸ்திரேலிய அரசாங்கம், யூத விரோத போக்கை பின்பற்றுவதே பிரச்சினையாகும்." - என்று இஸ்ரேலின் முன்னாள் நீதி அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காகவும், பாலஸ்தீன அரசை எதிர்ப்பதாலும் தனக்கான விசா மறுக்கப்பட்டிருக்கலாம் என ஊடகங்களிடம் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலிய உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.