ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள AUKUS பாதுகாப்பு கூட்டணியில் இணையக்கூடாது என்று நியூசிலாந்தை சீனா வலியுறுத்தியுள்ளது.
AUKUS கூட்டணியில் நியூசிலாந்து இணையும் பட்சத்தில் அது சீனாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையிலான உறவில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நியூசிலாந்துக்கான சீனத் தூதுவர் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கிடையிலான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் அவர் கவலையும் வெளியிட்டுள்ளார்.
AUKUS கூட்டணியில் இணையுமாறு நியூசிலாந்து, கனடா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே, சீன தரப்பில் இருந்து இதற்கு போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.
ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு கடிவாளம் போடுவதை மையமாகக்கொண்டே AUKUS பாதுகாப்பு கூட்டணியை ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஸ்தாபித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.