போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தமது நாட்டின் முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லா அமைப்பும் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
" மத்திய கிழக்கில் இருந்து இன்று எனக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நான் லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்களுடன் பேசினேன்." - என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போர் நிறுத்த இணக்கப்பாட்டை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பேரழிவுகரமான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று பைடன் அறிவித்ததையடுத்து அதற்கு பல நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அப்படையில், லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களுக்கு நீடித்த பாதுகாப்பை போர்க்களத்தில் மட்டும் அடைய முடியாது. அதனால்தான் போர் நிறுத்தத்தை உருவாக்க இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்புடன் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய காசாவின் ஹமாஸ் அமைப்பினருடனான போர் தொடர்ந்து நடைபெறும் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.
அதேவேளை, இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா வரவேற்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்துள்ளார்.
துன்பங்களை நீக்கவும், இடம்பெயர்ந்தவர்கள் தாயம் திரும்புவதற்கும் இது ஆரம்பக்கட்ட ஏற்பாடாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லெபனானில் வன்முறைக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி காசாவிலும் மாற்றத்தை ஏற்படுத்த வழிசமைக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.