கன்பராவிலுள்ள கூட்டாட்சி நாடாளுமன்ற வளாக பகுதியில் இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 இற்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகில் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகமாகக் கருதப்படும் Newcastle துறைமுகத்தில் நவம்பர் 17 ஆம் திகதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
புதிய நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு இடமளிக்ககூடாது எனவும், நிலக்கரி மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுமே காலநிலை விவகாரம் தொடர்பான ஆர்வாலர்களால் மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Newcastle துறைமுகத்தை முற்றுகையிட்டு இடையூறு ஏற்படுத்தியதால் 14 சிறார்கள் உட்பட 170 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே மேற்படி போராட்டத்தை முன்னெடுத்த தரப்பினர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது 50 இற்கு மேற்பட்டோர் நாடாளுமன்ற நுழைவாயிலை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்தே 20 இற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.