Australia

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கை தமிழர்கள்? குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக குடும்பத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 வயதுச்சிறுமி தருணிக்காவின் தலையில் உண்டான காயத்திற்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துவருவதாக SBS ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா தம்பதியினரின் இரண்டாவது மகளான தருணிக்காவின் தலையில் whiteboard விழுந்ததையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு குடிவரவு தடுப்புமுகாம் அதிகாரிகள் தயக்கம் காட்டியதாகவும், சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக தருணிக்கா காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சைக்காக காத்திருந்தபோது தருணிக்கா இரு தடவைகள் வாந்தி எடுத்ததுடன் அவரது முகம் வீக்கமடைந்ததையடுத்தே அதிகாரிகள் ஆம்புலன்சை வரவழைத்து அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்றதாக அகதிகள் செயற்பாட்டாளர் அஞ்சலா தெரிவித்துள்ளார்.

தருணிக்காவின் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவரது கால்கள் பலவீனம் அடைந்துள்ள போதிலும் அது படிப்படியாக சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருந்த பின்னணியில் மருத்துவ சிகிச்சைகளையடுத்து தடுப்பு முகாம் திரும்பியுள்ள தருணிக்கா தற்போது குணமடைந்து வருவதாகவும் அஞ்சலா கூறியுள்ளார்.

மெல்பேர்ன் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த குடும்பம் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு தருணிக்கா உட்பட ஆஸ்திரேலியாவில் பிறந்த இருபெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று மெல்பேர்ன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இறுதி முயற்சியாக உயர்நீதிமன்றில் இக்குடும்பம் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்துவந்த Biloela பகுதி மக்கள் இக்குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பேரணி, கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள போதும், இக்குடும்பத்திற்கு கருணைகாட்ட முடியாது என உள்துறை அமைச்சர் Dutton தொடர்ந்தும் மறுத்துவருகிறார்.

Related Articles

Back to top button