பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும், அவ்வொப்பந்தத்தை ஆஸ்திரேலியா கைவிடவில்லை என்று காலநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி தேர்தலில் லிபரல் கட்சி வெற்றிபெற்றால் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் தொடரும் என எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் அறிவித்துள்ள நிலையிலேயே, அரச தரப்பில் இருந்து மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதற்குரிய ஆவணத்திலும் கையொப்பமிட்டுள்ளார்.
உலகில் அதிகளவு கார்பன் மாசு ஏற்படுத்தும் நாடான அமெரிக்கா காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவு, புவி வெப்பமயமாதலை எதிர்த்து போரிடும் உலகளாவிய முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2015 பாரிஸ் ஒப்பந்தம் தன்னார்வமானது. இது நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிப்பதன் மூலம் ஏற்படும் பசுமை வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகளை நாடுகளே வழங்குவதற்கு அனுமதி வழங்குகின்றது.
ஆஸ்திரேலியாவின் நலனுக்கே முன்னுரிமை வழங்கி செயல்படுவதால் பசுமைக் கொள்கைத் திட்டம் தொடர்பான கொள்கையில் மாற்றம் வராது எனவும் ஆஸ்திரேலியாவின் காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.