ஆஸ்திரேலியரான ஒஸ்கார் ஜென்கின்ஸின் விடுதலை தொடர்பில், ரஷ்யாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஆஸ்திரேலியாவுக்கான உக்ரைன் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கைதிகள் பரிமாற்றம் திட்டத்தின்கீழ் இதற்குரிய கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கான போரிட்ட ஒஸ்கார், ரஷ்யாவால் கைது செய்யப்பட்ட பின்னர், கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
எனினும், அவர் உயிருடன் இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனையடுத்து அவரை விடுவித்துக்கொள்வதற்கு ஆஸ்திரேலியா இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.
ஒஸ்காரின் நிலை பற்றி ரஷ்யாவிடமும் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையிலேயே உக்ரைன் படைகளுடன் ஒஸ்கார் ஒப்பந்தம் செய்துள்ளதால், அவர் போர்க் கைதியாக பட்டியலிடப்படுவார் என ஆஸ்திரேலியாவுக்கான உக்ரைன் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
போருக்கு மத்தியிலும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் ரஷ்யாவும், உக்ரைனும் செயல்பட்டுவருகின்றன. அந்தவகையில் ஒஸ்காரை விடுவித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமருக்கிடையில் தொலைபேசிமூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.