ஆஸ்திரேலிய கிழக்கு கடற்கரையில் கண்டறியப்பட்ட சீனாவின் மூன்று போர்க்கப்பல்களின் நகர்வுகள் தொடர்பில் ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை செலுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
குயின்ஸ்லாந்தின் வடகிழக்கு கடற்பகுதியிலேயே மேற்படி போர்க்கப்பல்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.
சிட்னி கடற்கரையிலிருந்து சுமார் 150 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்சீனக் கடல்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானம்மீது, சீனாவின் போர் விமானம் தீப்பொறி வீசி அச்சுறுத்தியுள்ள நிலையிலேயே, சீன கப்பல்கள்மீது கன்பராவின் பார்வை திரும்பியுள்ளது.
சீன போர்க்கப்பல்கள் சர்வதேச சட்டத்தை மீறவில்லை என்றபோதிலும் அவை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்துவருகின்றோம் என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்தார்.
சர்வதேச கடல்பரப்பில் செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருப்பதுபோல், கண்காணிப்பதற்குரிய உரிமை எமக்கும் உள்ளது எனவும் அவர் கூறினார்.