உக்ரைன் ஜனாதிபதியை டொனால்ட் ட்ரம்ப், சர்வாதிகாரியென விமர்சித்துள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதிக்கான ஆதரவை ஆஸ்திரேலியா வெளிப்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த பேச்சில் பங்கேற்பதற்குரிய உரிமை உக்ரைனுக்கு உள்ளது எனவும், உக்ரைனின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்தார்.
அத்துடன், ரஷ்யாவின் சட்டவிரோத போரையும் அவர் கண்டித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில் உக்ரைனின் ஆதரவு இல்லாத போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க தயாரில்லை என உக்ரைன் ஜனாதிபதி அறிவித்தார்.
இதனையடுத்து தேர்தலை நடத்தாத சர்வாதிகாரியென உக்ரைன் ஜனாதிபதிக்கு, அமெரிக்க ஜனாதிபதி பதிலடி கொடுத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உக்ரைனுக்கான ஆதரவை ஆஸ்திரேலியா வெளிப்படுத்தியுள்ளது.
எனினும், உக்ரைன் ஜனாதிபதியை ட்ரம்ப் சர்வாதிகாரியென விமர்சித்தமை தொடர்பில் நேரடி பதிலை வழங்குவதை ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் தவிர்த்துக்கொண்டுள்ளார். ரஷ்யாவே ஆக்கிரமிப்பாளர் என அவர் சாடியுள்ளார்.