கனேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய ஒப்பந்தம் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு தலைவர் கெஹெல்பெத்தர பத்மே என்பவரால் வழங்கப்பட்டுள்ளது எனவும், பல மாதங்கள் திட்டமிட்டே இக்கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதென அறியமுடிகின்றது.
நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணிபோல் வேடமிட்டு சென்ற நபருக்கும், அவருக்கு உதவிய செவ்வந்தி என்ற பெண்ணுக்கும் இடையில் கெஹெல்பெத்தர பத்மேயின் சகாவான அவிஸ்க என்பவரே தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
பாதாள குழு தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவவை சுட்டுக்கொன்ற நபர் இராணுவத்திலிருந்து வந்த பிறகு மஹரகம பகுதியில் ஆட்டோ சாரதியாக தொழில் செய்து வந்துள்ளார். அவர் இரு வருடங்களுக்கு முன்னர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்.
ஒன்றாக சுற்றிதிரிந்த ஜோடி
அறிமுகத்தின் பின்னர் செவ்வந்தியும், துப்பாக்கி தாரியும் நெருங்கி பழகியுள்ளனர். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் நான்கு நாட்கள் ஹோட்டலொன்றில் இருந்து திட்டம் வகுத்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
அதற்கு முன்னர் மினுவாங்கொடை பகுதியிலுள்ள வீடொன்றில் வாழ்ந்துவந்துள்ளனர்.
கெஹெல்பெத்தர பத்மே உடைய போதைப்பொருள் வலையமைப்பில் முக்கிய முக்கிய பிரமுகராக செவ்வந்தி கருதப்படுகின்றது.
சிக்கியது எப்படி?
புத்தளம் பகுதியில் சோதனை நடந்தபோது, வேகமான வந்த வாகனமொன்றுக்குள் சூத்திரதாரி இருந்துள்ளார். அவரிடம் வினவியபோது,
தான் ஒரு சட்டத்தரணியெனவும், இத்தாலியில் இருந்து வந்துள்ளதாகவும், கற்பிட்டிய பகுதிக்கு செல்வதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட, சட்டம் தொடர்பில் சில கேள்விகள் எழுப்பட்டவேளையே அவர் சிக்கியுள்ளார்.
அவர் கொண்டுசென்ற பையில் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பார்ட்டி
கனேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அதற்குரிய ஒப்பந்தத்தை வழங்கிய பத்மே, வெளிநாட்டில் பார்ட்டி வைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.