உக்ரைனில் அமைதி படையை நிலை நிறுத்துவதற்குரிய தமது நாட்டின் பங்களிப்பு தொடர்பில் உலக தலைவர்களுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி பேச்சு நடத்தவுள்ளார்.
தொலைபேசி ஊடாக நாளை இரவு இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கலந்துரையாடலில் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போர் நிறுத்தப்பட்டால் உக்ரைனில் அமைதி படையை நிலைநிறுத்துவது தொடர்பிலும், அந்நாட்டுக்கான உதவிகள் சம்பந்தமாகவும் 30 இற்கு மேற்பட்ட நாடுகள் ஆராய்ந்துவருகின்றன.
இந்நிலையிலேயே உக்ரைன் அமைதிபடைக்காக தமது நாட்டு படையினரை அனுப்புவது பற்றி ஆஸ்திரேலியா சாதகமாக பரிசீலித்துவருகின்றது. எனினும், இந்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.