சிட்னி மேற்கிலுள்ள லகெம்பா மசூதியை குறிவைத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்பு கருத்து தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மேற்படி கருத்து அருவறுப்பானது என சுட்டிக்காட்டி, அதனை நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் மசூதியில் ஆஸ்திரேலியர் ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 51 பேர்வரை கொல்லப்பட்டனர்.
இப்படியான பயங்கரவாத தாக்குதலை ஊக்கு விக்கும் வகையில் மேற்படி பதிவு அமைந்திருந்தது.
லகெம்பா மசூதியை லெபனான் முஸ்லிம் சமூகம் நிர்வகித்துவருகின்றது. மேற்படி கருத்து தொடர்பில் அவர்களால் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் வெறுப்பு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை முஸ்லிம் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.