யாழ்ப்பாணம் – நிலாவரை கிணற்றுக்கு அருகில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது.
இன்று (21) முற்பகல் நிலாவரைக் கிணற்றுப் பகுதிக்குச் சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.
இதன்போது அங்கு சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த இடத்தில் கட்டடம் ஒன்று இருந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது எனவும், அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது எனவும், செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளளர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எம்.கே. சிவாஜிலிங்கம், குறித்த பணியை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெறாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள்வியல் திணைக்களம் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பை முன்னெடுத்து வருகின்றது. புத்த பெருமானை வைத்து ஆக்கிரமிப்பைச் செய்ய முனைகின்றனர்.
குறித்த பணியைச் செய்யின் உரிய அனுமதியைப் பெற்றுச் செய்யுங்கள், இல்லையோல் பொதுமக்களைத் திரட்டி எதிர்ப்புத் தெரிவிப்போம்” என்றார்.