others

ஆஸி. ஊடகருக்கு சீன அதிகாரிகள் இடையூறு: தூதரகத்தில் முறையீடு!

சீன பிரதமர் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த நிலையில், ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் Cheng Lei இற்கு சீன அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் சீன தூதரகத்திடம் ஆஸ்திரேலியா முறையிட்டுள்ளது.

இந்த தகவலை ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese உறுதிப்படுத்தியுள்ளார்.

சீனா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டாக ஊடக சந்திப்பை நடத்தினர்.

குறித்த ஊடக சந்திப்பில், சீனாவில் சிறை வைக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த வருடம் விடுதலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் Cheng Lei
வும் பங்கேற்றிருந்தார்.

சீன ஊடகமொன்றில் பணியாற்றிய Cheng Lei , சீன இரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 2020 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த Cheng Lei ஐ சூழ்ந்துகொண்ட சீன அதிகாரிகள், அவருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுவது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.

இந்நிலையிலேயே இது தொடர்பில் சீன தூதரகத்திடம் ஆஸ்திரேலியா முறையிட்டுள்ளது.

ஊடகவியலாளர் Cheng Lei தற்போது ஆஸ்திரேலிய ஊடகமொன்றில் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button