வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் தொடர்பில், அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்போன்ற அச்சுறுத்தல் நிலை அல்ல." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான தகவலை வைத்து சமூகத்தில் வீண்பதற்றத்தை ஏற்படுத்தி எவரும் அரசியல் இலாபம் தேட முற்படக்கூடாது எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வா குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
' இலங்கைக்கு வருகைதந்துள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என எமது புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு உளவு தகவல் கிடைத்த கையோடு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதமாகின்றது. இக்காலப்பகுதிக்குள் பல தடவைகள் பாதுகாப்பு சபை கூடியுள்ளது. முதலாவது, இரண்டாவது தேசிய சபைக் கூட்டத்தின்போதே புலனாய்வு பிரிவுகளால் இந்த தகவல்கள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் சஞ்சரிக்ககூடிய அறுகம்பே, பண்டாரளை எல்ல பகுதி, மாத்தறை வெலிகம பகுதி உள்ளிட்ட கரையோக பகுதிகளுக்கு இம்மாதம் ஆரம்பம் முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதற்கமைய சந்தேகத்தின்பேரில் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவர்களிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.
ஒக்டோபர் 22 ஆம் திகதியும் பாதுகாப்பு சபை கூடியது. ஜனாதிபதி, பிரதமர், நான் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர், விசாரணை நடத்தும் தரப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். அன்றிரவு முதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டது. நேற்று (நேற்று முன்தினம்) விசேட பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முப்படையினரும் ஆரம்பம் முதலே விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.
குறிப்பாக இஸ்ரேலியர்கள் இலக்குவைக்கப்படலாம் என தகவல் வெளியானது. எனவே, இஸ்ரேலியர்கள் கூடும் இடங்களிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே, எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடலாம்.
எமது நாட்டு மக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் கிடைக்கவில்லை. எனவே, வீண் பதற்றம் தேவையில்லை.
அதேவேளை இராஜதந்திர மட்டத்திலும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தூதுவருடன் பேச்சு நடத்தினோம். ஏனைய தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடனும் தகவல்களை பரிமாற்றிக்கொண்டுள்ளோம்.
கிடைக்கப்பெற்ற தகவல்களை உறுதிப்படுத்தும்வரை மக்களுக்கு கூறமுடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய வகையில் நாம் செய்திருந்ததால் அது பற்றி அறிவிக்கவில்லை. முன்னேற்பாடுகளை உரிய வகையில் நாம் செய்திருந்தோம்." - என்றார்.