எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெற்று, ராஜபக்சக்களின் இறுதி அரசியல் கோட்டையையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
கடந்த தடவையைபோலவே இம்முறையும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. எட்டு அரசியல் கட்சிகளும், சுயேசைக்குழுவொன்றும் தேர்தலில் போட்டியிட்டன.
55 ஆயிரத்து 305 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தனர். 36 ஆயிரத்து 825 பேர் வாக்களித்திருந்தனர். 520 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
17 ஆயிரத்து 295 வாக்குகளைப் பெற்று, தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களும், 7 ஆயிரத்து 924 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 ஆசனங்களும், 3 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்ற மொட்டு கட்சிக்கு மூன்று ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
மக்கள் கூட்டணிக்கு இரு ஆசனங்களும், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும், மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமும், சுயேச்சைக்குழுவொன்று இரு ஆசனங்களையும் கைப்பற்றின.
2019 இல் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் மொட்டு கட்சி 17 ஆசனங்களைக் கைப்பற்றி இருந்தது. தேசிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்களே கிடைக்கப்பெற்றிருந்தன. அத்தேர்தலில் ஜே.வி.பியாகவே தேசிய மக்கள் சக்தி போட்டியிட்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏழு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. அத்தேர்தலுக்கு சஜித்தே ஐதேக தரப்பில் முன்னின்று செயற்பட்டார். எனினும், இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியாகவே சஜித் அணி போட்டியிட்டது.