“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் - 4 வெளியிட்ட காணொளியில் முகத்தை மறைத்துக்கொண்டு, குரலையும் மாற்றிக்கொண்டு கருத்துகளை முன்வைத்த தேசத்துரோகியொருவருக்கே இந்த ஆட்சியின்கீழ் உயர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், சுவிஸில் அரசியல் தஞ்சம் பெறுவதற்காகவே அசாட் மௌலானா என்பவர் சாட்சியமளித்துள்ளார் எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 ஊடகம் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட இமாம் குழுவின் அறிக்கையையும், இணைப்புகள் சகிதம் கம்மன்பில நேற்று வெளியிட்டார்.
இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் அவர் கூறியவை வருமாறு ,
“சனல் 4 காணொளியின்போது எமது நாட்டு புலனாய்வு பிரிவுமீது அஹாட் மௌலானா என்பவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவு ,சஹ்ரான் தலைமையிலான தற்கொலைதாரிகள் குழுவுடன் மூன்று மணிநேரம் கலந்துரையாடியது என குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், சஹ்ரான் குழுவுக்கும், அஸாட் மௌலானாவுக்கும் இடையில்தான் தொடர்பு இருந்துள்ளது. அதனால்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் வெளிநாடு செல்வதற்கு மௌலானா முற்பட்டுள்ளார்.
சனல் 4 முன்னிலையில் மௌலான பொய்யுரைத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை பெறுவதற்காகவே அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளார் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முகத்தை மூடிக்கொண்டு, குரலையும் மாற்றிக்கொண்டு தன்னை ஓய்வுபெற்ற அரச அதிகாரியென கூறிக்கொண்டு கருத்துகளை முன்வைத்த நபர் யார்? அவர் பொலிஸில் இருந்தவர் எனக் கூறப்படுகின்றது.
இவர் சிஐடியில் இருந்த பிரதான எனவும் சொல்லப்படுகின்றது. இது ஊகம் மாத்திரமே, அதனால் பெயரை வெளியிடமாட்டேன்.
பயங்கரவாதிகளுடன் புலனாய்வு பிரிவுக்கு நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். அப்போதுதான் பயங்கரவாதிகளின் திட்டத்தை அறிந்துகொள்ள முடியும். சஹ்ரான் தொடர்பில் புலனாய்வு பிரிவினரால் உரிய தரப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சஹ்ரான் குழுவுடன் தொடர்பு இருந்ததால்தான் தகவல்களை திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்துள்ளது.
இமாம் குழு முன்னிலையில் சாட்சியளிக்குமாறு சனல் 4 விற்கும், மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இரு தரப்புகளும் அந்த அழைப்பை நிராகரித்துள்ளன.
குற்றச்சாட்டை சுரேஸ் சலே நிராகரித்தார். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார். இதனையடுத்து இணையத்திலிருந்து சனல் 4 காணொளியை எடுத்துவிட்டது. சனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை வேண்டும் என தேசிய மக்கள் சக்தி அன்று வலியுறுத்தியது. இன்று உண்மை தெரிந்துவிடும் என்பதாலேயே அறிக்கை வெளியிடப்படாமல் இருக்கக்கூடும்.
ஜனாதிபதி அறிக்கை வெளியிடாதால்தான் நாம் வெளியிட்டோம். முதலாவது அறிக்கையில் நாம் இணைப்புகளை வெளியிடவில்லை. தேசிய பாதுகாப்பு கருதி அதனை செய்யவில்லை. எனினும், இமாம் அறிக்கையில் உள்ள இணைப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.”- என்றார்.