பிரிக்ஸ் அமைப்பை விஸ்தரிப்பதில்லை என அதில் அங்கம் வகிக்கும் 9 நாடுகளின் அரச தலைவர்கள் தீர்மானித்துள்ளதால் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய வாய்ப்பு இலங்கைக்கு கிட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது அமைச்சர் மேலுமு; கூறியவை வருமாறு,
“ பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய அங்கத்துவத்தை நாம் கோரி இருந்தோம். இது தொடர்பில் மேற்படி அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் எழுத்துமூலம் தெரியப்படுத்தி இருந்தோம்.
பிரிக்ஸ் அமைப்பில் 9 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்நாடுகளின் தலைவர்கள், பிரிக்ஸ் அமைப்பை விஸ்தரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனால் எந்தவொரு நாட்டுக்கும் புதிதாக இணையும் வாய்ப்பு கிட்டவில்லை.
எனினும், பங்குடமை கட்டமைப்பொன்று ஸ்தாபிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின்கீழ் புதிய அபிவிருத்தி வங்கி உள்ளது. அதில் இலங்கைக்கு அங்கத்துவம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதில் இணைவது தொடர்பில் நாம் தீர்மானம் எடுக்க வேண்டும். அது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்மானம் எட்டப்படும்.
பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இணைவதை எந்தவொரு அங்கத்துவ நாடும் எதிர்க்கவில்லை. அந்த அமைப்பை விஸ்தரிப்பதில்லை என்ற முடிவால்தான் வாய்ப்பு மறுக்கப்பட்டது.”- என்றார்.