" பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எமது அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கவில்லை. அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே உறுதியான நிலைப்பாடாகும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கடந்த முறையும் கேள்வி எழுப்பட்டது. தற்போது நாடாளுமன்றம் செயற்படவில்லை. எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது, மறுசீரமைப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அதனால்தான் தற்போதைய சூழ்நிலையில் நீக்கப்படாது என கூறி இருந்தேன்.
பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. நாடாளுமன்றம் கூடிய பின்னரே அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே, இது தொடர்பில் தவறான கோணத்தில் கருத்துகளை பரப்ப வேண்டாம். இது விடயத்தில் நாம் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கவில்லை. அன்று இருந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளோம். புதிய நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும்." - என்றார்.