"அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம்.
சட்டவிரோதமான முறையில் செயற்படுவதை த் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்கு உங்களின் உரிமை மற்றும் பலம். அந்த உரிமையை நாளை வியாழக்கிழமை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கையும் பாதுகாக்க ஒத்துழையுங்கள்."
- இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாடாளுமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தற்காலிக உத்தியோகத்தர்கள் தமக்குரிய கடமைகளில் ஈடுபட வேண்டும். கடமைகளில் ஈடுபடாமலிருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவடைந்துள்ளன. இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இ - சேவைக்குள் பிரவேசித்து முறையான வழிமுறைகளை பின்பற்றி தமக்கான வாக்காளர் அட்டைகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை இருப்பது கட்டாயமல்ல. வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகின்றது. இ - சேவை ஊடாக வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தேருநர் இடாப்பில் தாம் பதிவு செய்துள்ள முகவரியில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்களிக்க முடியும். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ளவர்கள் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்வது வாக்காளர்களுக்கும், வாக்களிப்பு மத்திய நிலைய உத்தியோகத்தர்களுக்கும் இலகுவானதாக இருக்கும்.
வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிப்பதற்காகவே தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டுள்ளன. வாக்களிப்பு மத்திய நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தை அண்மித்த பகுதியில் தேர்தல் பிரச்சாரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முன்னெடுப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொகுதிகளில் உள்ள காரியாலயங்கள் மற்றும் அவற்றை சூழ அமைக்கப்பட்ட பதாதைகள், கட்சி கொடிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும்.
வாக்களிப்பு சிவில் பிரஜைகளின் அடிப்படை உரிமையாகும். ஆகவே, வாக்களிக்கச் செல்வதற்கு அனைவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு தாபன விதிக்கோவையின் பிரகாரம் குறைந்தபட்சம் 4 மணித்தியாலங்கள் வாக்களிக்கச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அத்துடன் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு விடுமுறை வழங்க வேண்டும்.
தனியார்துறை சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவது தொழில் அல்லது சேவை வழங்குநர்களின் பொறுப்பாகும்.
தூரப் பிரதேசங்களில் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிக்கச் செல்லவுள்ள வாக்காளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும்.
வாக்களிக்கச் செல்லும்போது தேசிய அடையாள அட்டை (பழையது அல்லது புதியது), செல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, சிரேஷ்ட பிரஜை அடையான அட்டை ஆகியவற்றைக் காண்பித்து தமது ஆளடையாள அட்டையை உறுதிப்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காண்பிக்க தவறும் பட்சத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது.
வாக்களிப்பு தினத்தன்று வாக்காளர்கள், வாக்களிப்பு மத்திய நிலைய பணிக்குழாம், போட்டியிடும் வேட்பாளர், வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், வாக்களிப்பு நிலைய கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் மாத்திரமே வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியும்.
போட்டியிடும் வேட்பாளர் வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியும். ஆனால், வாக்களிக்கும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது.
வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் தொலைபேசி கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வாக்களிப்பு மத்திய நிலையத்தையும், வாக்களிப்பதையும் புகைப்படமெடுப்பதையும், காணொளியாகப் பதிவிடுவதையும், தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆயுதங்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை கைவசம் வைத்திருத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தி விட்டு வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
வாக்குச்சீட்டுக்கள் இரண்டு வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. மொனராகலை, பொலனறுவை, கேகாலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 'ஒற்றை நிரல்' வாக்குச்சீட்டு விநியோகிக்கப்படும். ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களுக்கு 'இரட்டை நிரல்' வாக்குச் சீட்டு விநியோகிக்கப்படும்.
வாக்காளர் ஒருவர் தாம் விரும்பும் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் பெயர் மற்றும் சின்னத்தின் முன்பாகப் புள்ளடியிட்டு வாக்களிக்க முடியும். வேட்பாளர் விருப்பு வாக்கு ஒன்றை அளிக்க விரும்புவாராயின் ஒரு விருப்பு வாக்கு இலக்கத்தின் முன்பாகப் புள்ளடியிட முடியும்.
இரண்டு விருப்பு வாக்குகளை அளிக்க விரும்புவதாயின் இரண்டு விருப்பு வாக்கு இலக்கங்கள் முன்னிலையில் புள்ளடியிட முடியும். அதேபோல் 3 விருப்பு வாக்குகளை அளிக்க விரும்புவதாயின் 3 விருப்பு வாக்கு இலக்கங்கள் முன்பாகப் புள்ளடியிட முடியும்.
வாக்குச்சீட்டில் உத்தியோகபூர்வ அடையாளமிடாமல் இருத்தல், வாக்குச்சீட்டில் வாக்களிப்பு அடையாளமிடமலிருத்தல், அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களிக்காமல் விருப்பு வாக்கு மாத்திரம் அளித்தல், ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தல் ஆகிய காரணிகளால் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.
தேர்தல் சட்டங்களைச் சிறந்த முறையில் முழுமையாக செயற்படுத்திய காரணத்தால்தான் இம்முறை தேர்தல்கள் வன்முறைகள் மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாரதூரமான சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
வாக்களித்ததன் பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள். உங்களின் குடும்பம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அதன் விளைவு தாங்கள் ஆதரவளித்த வேட்பாளர்களுக்குத் தாக்கம் செலுத்தாது. ஆகவே, எந்நிலையிலும் உங்கள் குடும்பத்தைக் கருத்தில்கொண்டு செயற்படுங்கள்.
வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்றுகூடல், ஊர்வலம் மற்றும் பேரணியாகச் செல்லல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் முடிவுகள் மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளுங்கள். முடிவுகள் வெளியானவுடன் பொது இடங்களில் பட்டாசு கொளுத்துவது சட்டவிரோதமான செயற்பாடாகும். முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையில் செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலைச் சிறந்த முறையில் நடத்துவதற்குச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறு பாதுகாப்புத் தரப்புக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம். சட்டவிரோதமான முறையில் செயற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
வாக்கு உங்களின் உரிமை மற்றும் பலம். அந்த உரிமையை நாளை வியாழக்கிழமை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கையும் பாதுகாக்க ஒத்துழையுங்கள்." - என்றார்.