தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள ஆதரவானது இனவாதத்துக்கு எதிரானது மட்டுமல்ல பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியவை வருமாறு,
" பிரிவினைவாதத்துக்கு சார்பாக செயற்பட்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக, தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு தாம் எதிரானவர்கள் என்ற செய்தியை இதன்மூலம் மக்கள் வழங்கியுள்ளனர்.
ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிட்டும் வகையிலான பயணம் தொடர வேண்டும் என்பதற்குரிய ஆணையே இந்த அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கான எமது பொறுப்பை நாம் என்றும் கைவிடப்போவதில்லை. அந்த பயணம் தொடரும். பிரபுக்கள் அல்லாத தரப்புகள் வசம் ஆட்சி சென்றுள்ளது. இதனை வரவேற்கின்றோம். டயஸ்போராக்கள் மற்றும் அந்நிய சக்திகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல் பயணித்தால் ஆதரவளிக்கப்படும். அவ்வாறு இல்லையேல் அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம்." - என்றார் விமல் வீரவன்ச.