வடக்கு மக்கள் புரட்சிகரமான மாற்றத்தை செய்துள்ளனர். அதற்கு நிச்சயம் தலைவணங்கியாக வேண்டும். தமிழ் மக்களுக்கென பிரத்தியேகமான பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்படும் - என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் இதுவரைகாலமும் அரசியல் முகவர்கள் ஊடாகவே தேர்தல் காலத்தில் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
பிரதான கட்சிகள் வடக்கிலோ, மலையகத்திலோ போட்டியிடமாட்டா. அங்குள்ள கட்சியொன்றின் ஊடாக பேரம் பேசல் இடம்பெறும். அந்த அரசியல் முகவர்களும் மக்கள் பிரச்சினையை விற்று, பதவிகளை பெற்றுவந்தனர்.
இந்நிலைமையை நாம் மாற்றினோம்;. ஒரு கட்சியாக அனைத்து இடங்களிலும் போட்டியிட்டோம். எல்லாம் புதியவர்கள். வடக்கு மக்களும் எமக்கு பேராதரவு வழங்கினர். மலையகத்திலும் ஆதரவு கிட்டியது. யாழ்.(வடக்கு) மக்கள் எடுத்த தீர்மானத்துக்கு கட்டாயம் தலைவணங்கி மரியாதை செலுத்த வேண்டும். அது புரட்சிகரமான தீர்மானமாகும்.
முழு நாடும் ஒரு கட்சியின்கீழ் திரண்டுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. ஒரு நாட்டுக்குள் வாழ்வதற்கு மக்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வடக்க, கிழக்கு மக்களுக்கென குறிப்பாக பல பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்படும். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்."- என்றார்.