" உறவுகளை நினைவுகூர உரிமை உள்ளது. எனினும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை நினைவுகூர இடமில்லை. எனவே, புலித்தலைவர்களை எவரேனும் நினைவுகூர்ந்தால் அதற்கு எதிராக பொலிஸார் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
' 2011 ஆகஸ்ட் 29 ஆம் திகதி அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பயங்கரவாத அமைப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி திரட்டல், ஏற்பாடுகளை செய்தல், சின்னங்களை பயன்படுத்தல், கொடிகளை பயன்படுத்தல், அமைப்பின் பாடல்களை ஒலிபரப்புதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.
எனவே, தடைசெய்யப்பட்ட அமைப்பின் சின்னம், கொடி மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்த முடியாது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இது பற்றி தெளிவாக அறிவித்துள்ளார்.
எவரேனும் உயிரிழந்த தமது உறவுகளை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர்ந்தால் அதற்கு தடை விதிக்க முடியாது. உறவுகளை நினைகூரல் என்பதும், புலிகளை கட்டியெழுப்புதல் என்பதும் இருவேறுப்பட்ட விடயங்களாகும். இவ்விரு விடயங்களையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்குள்ள உரிமையை மதிக்கின்றோம். எனினும், தடைசெய்யப்பட்ட அமைப்பை நினைவுகூருவதற்கு இடமில்லை. எமது அரசியலும் அதற்கு இடமில்லை. எனவே, எவரேனும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள். புலித்தலைவர்களை நினைகூர இடமில்லை. அவ்வாறு செய்தால் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்." - என்றார்.